திண்டுக்கல்லில் கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திண்டுக்கல்லில் கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல்:
பள்ளி கல்வித்துறையின் வயது வந்தோர் கல்வி திட்டம், கற்போம் எழுதுவோம் திட்டம் ஆகியவை மூலம் கல்வி அவசியம் குறித்து திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 8 நாட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதையொட்டி ஒவ்வொரு நாளும் 2 மேல்நிலைப்பள்ளிகள், பொதுமக்கள் கூடும் ஓரிடம் என 3 இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதனை முதன்மை கல்வி அலுவலர் கருப்புசாமி நேற்று தொடங்கி வைத்தார். இதையடுத்து முதல் நாளான நேற்று திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நரசிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, நாகல்நகரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கரகாட்டம், பறையாட்டம், ஒயிலாட்டம், கும்மி ஆகியவை மூலம் பெண் கல்வி அவசியம், படிப்பை பாதியில் கைவிடுவதை தவிர்த்தல், 18 வயதுக்கு மேற்பட்டோரின் கற்றல் திறனை மேம்படுத்துதல், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் ஜான்பிரிட்டோ, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அனுஷா, கலைக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஷாஜகான், தனபால், மாநகராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி பிளாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.