மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை தலைமை செயலாளர் ஆய்வு
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 25-ந் தேதி வரை மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மை பணி முகாமாக அறிவிக்கப்பட்டுள்ளது.;
இந்த முகாம் மூலம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஊரக, நகர்ப்புற பகுதிகளில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களையும் 20 சதவீதம் தூர்வாரி தூய்மைப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதன்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட எம்.ஆர்.சி.நகர் பிரதான சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, வெஸ்ட்காட் சாலை மற்றும் காந்தி மண்டபம் சாலையில் உள்ள மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். அடுத்த ஆண்டு முதல் பருவமழை தொடங்குவதற்கு 3 மாதத்துக்கு முன்னர் மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதில் ஒரு மாதம் மிகத் தீவிரமாக தூர்வாரும் பணியை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்து பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டார்.