ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மாமியார்- மருமகள் போட்டி - ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் பரபரப்பு
ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மாமியார்- மருமகள் போட்டியிடுகின்றார். ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவி பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஊத்துக்காடு கிராமத்தை சேர்ந்த சாவித்திரி மணிகண்டன் (வயது 43) என்ற பெண் வேட்பாளர் போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து அவரது மாமியார் ஜெயலட்சுமி லோகநாதன் (வயது 61) என்பவரும் போட்டியிடுகிறார்.
ஒரே நேரத்தில் மாமியாரும், மருமகளும் வேட்புமனு தாக்கல் செய்ய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்த மாமியாரும் மருமகளும் ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் சபாஷ் சரியான போட்டி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.