மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் பலி
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.;
காஞ்சீபுரம்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் அரிபிரசாத் (வயது 30). இவர் தாம்பரம் பகுதியிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இவர் தனது சொந்த ஊரான ஆம்பூருக்கு சென்றுவிட்டு மீண்டும் பணிக்கு தனது மோட்டார் சைக்கிளில் தாம்பரத்திற்கு செல்ல காஞ்சீபுரம் வழியாக புதிய ரெயில்வே நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே அதிவேகமாக வந்த ஒரு கார் மோட்டார்சைக்கிள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அரிபிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அவருடன் பொன்னேரிக்கரை பகுதியில் இருந்து லிப்ட் கேட்டு உடன் வந்த திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்த பூவண்ணன் (27) படுகாயம் அடைந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து அரிபிரசாத்தின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயங்களுடன் இருந்த பூவண்ணனை ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.