போலீஸ்காரரை தாக்கி கொலை மிரட்டல்
கார் மீது மோதுவதுபோல் வந்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.;
மூலக்குளம், செப்-
கார் மீது மோதுவதுபோல் வந்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
தாக்குதல்
புதுச்சேரி காந்திதிருநல்லூர் பம்ப் ஹவுஸ் வீதியை சேர்ந்தவர் சுந்தர் (வயது 40). ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர். நேற்று முன்தினம் மாலை சுந்தர் தனது மனைவியுடன் காரில் குரும்பாபேட் சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் காரில் உரசுவது போல வேகமாக வந்தனர். இதனை பார்த்த சுந்தர், காரை நிறுத்தி அவர்களை தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர். ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் சுந்தரின் காரை பின்தொடர்ந்து சென்று, அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். இதனை தடுத்த அவரது மனைவியையும் தாக்கி மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
வாலிபர் கைது
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் சுந்தர் புகார் அளித்தார். அதன்பேரில் சப்&இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை, அவர்கள் வந்த வண்டியின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கல்மேடுபேட் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், அஜித், ஜோதி என்பது தெரியவந்தது.
இதையடுத்து சதீஷ்குமாரை (23) போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.