தீக்குளித்த தொழிலாளி சாவு: தற்கொலைக்கு தூண்டிய பைனான்சியர் கைது
தீக்குளித்த தொழிலாளி இறந்ததை தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக பைனான்சியரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கருவந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 42). கட்டிட தொழிலாளி. இவர் அப்பகுதியைச் சேர்ந்த பைனான்சியரான கனகராஜிடம் (55) ரூ.70 ஆயிரம் கடன் வாங்கியதாகவும், பின்னர் கொரோனா ஊரடங்கால் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கனகராஜ், கணேசனின் வீட்டுக்கு சென்று கடனை திருப்பி கேட்டு தகராறு செய்து, அவரை அவதூறாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கணேசனின் மனைவி 2 மகள்களுடன் தனது பெற்றோரின் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த கணேசன் சம்பவத்தன்று வீட்டில் திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகி பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கு தூண்டியதாக கனகராஜ் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் வேளாங்கண்ணியில் பதுங்கி இருந்த கனகராஜை போலீசார் கைது செய்தனர்.