நெல்லையப்பர் கோவிலில் பக்தர்களுக்கு இலையில் உணவு
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் பக்தர்களுக்கு இலையில் உணவு பரிமாறப்பட்டது.
நெல்லை:
தமிழகத்தில் கொரோனா பரவலையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அங்குள்ள அன்னதான கூடங்களில் ஏழை, எளிய பக்தர்களுக்கு மதிய நேரத்தில் இலையில் உணவு பரிமாறியதை நிறுத்தி விட்டு, உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு பெரும்பாலும் தளர்த்தப்பட்டு இருப்பதால், கோவில் அன்னதான கூடங்களில் பக்தர்களுக்கு இலையில் உணவு பரிமாற அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் நேற்று மதியம் பக்தர்கள் அன்னதான கூடத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அங்குள்ள சாப்பாடு மேஜை முன்பு அவர்கள் அமர வைக்கப்பட்டு இலை போட்டு உணவு பரிமாறப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ், கோவில் செயல் அலுவலர் ராமராஜா மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் அன்னதானம் வழங்கப்படும் அனைத்து கோவில்களிலும் நேற்று பக்தர்கள் அங்கேயே அமர்ந்து சாப்பிடும் வகையில் இலையில் உணவு பரிமாறப்பட்டது.