நெல்லையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் போராட்டம்
நெல்லையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
நெல்லை:
விவசாயிகளை பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை, பெகாசஸ் உளவு விவகாரம் போன்றவற்றில் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், தி.மு.க. கூட்டணி கட்சியினர் நேற்று தங்களது வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். கட்சி அலுவலகத்திலும் கருப்புக்கொடிகள் கட்டப்பட்டு இருந்தன.
பாளையங்கோட்டை மகாராஜ நகரில் உள்ள நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடந்தது. களக்காடு வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ கருணாநிதி, முன்னாள் யூனியன் தலைவர் ஜார்ஜ் கோசல், கணேஷ்குமார் ஆதித்தன், வக்கீல் சரவண மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிகோட்டை செல்லத்துரை, நெல்லை சங்கர்நகரில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடந்தது. இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். கருப்புக்கொடிகளை கைகளில் ஏந்தியும், தலையில் போர்த்திக் கொண்டும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம் தலைமையில் அக்கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. பகுதி செயலாளர் துபை சாகுல் தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சி, த.மு.மு.க. மாவட்ட தலைவர் ரசூல் மைதீன், ம.ம.க. மாவட்ட துணை செயலாளர் காஜா உள்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு தனது வீட்டின் முன்பு கட்சி நிர்வாகிகளுடன் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். களக்காட்டில் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், ஒன்றிய செயலாளர் பி.சி.ராஜன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கருப்புக்கொடி ஏந்தி பங்கேற்றனர். களக்காடு நகர தி.மு.க. சார்பில் நகர பொறுப்பாளர் மணிசூரியன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். அப்பர்குளத்தில் ஒன்றிய துணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமையில் போராட்டம் நடந்தது.