மேம்பால சுரங்க பாதையில் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்
பெங்களூரு சோமண்ணா கார்டன் பகுதியில் உள்ள மேம்பால சுரங்க பாதையோரம் குப்பை மலைபோல் குவிந்து கிடக்கிறது. அந்த குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்கிறார்கள். மேலும் குப்பைகளை தெருநாய்களும் கிண்டுவதால் சாலையில் குப்பைகள் வந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடும் நிலவி வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் உடனே குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்வர், சோமண்ணா கார்டன்.
---------------
சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?
பெங்களூரு விஜயநகர் பைப்லைன் ரோட்டில் இருந்து கோரிபாளையாவுக்கு செல்லும் சாலை மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. அதாவது அந்த சாலையின் ஒரு பகுதியில் பாதி அளவு பெயர்ந்து சேதமடைந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் மெதுவாக செல்கின்றனர். ஆனால் இரவு நேரங்களில் வாகனங்களில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அன்வர் அலி, கோரிபாளையா.
----------------------
பூங்காவில் உடைந்து கிடக்கும் விளையாட்டு உபகரணங்கள்
பெங்களூரு விஜயநகர் பைப்லைன் ரோடு டெலிகிராம் லே-அவுட்வில் ஒரு பூங்கா உள்ளது. அந்த பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்காக ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. ஆனால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் உடைந்து கிடக்கின்றன. இதனால் அந்த பூங்காவுக்கு சிறுவர், சிறுமிகள் செல்வது இல்லை. இதனால் அந்த பூங்காவில் புற்கள் வளர்ந்து உள்ளது. மேலும் விஷ ஜந்துகளும் அங்கு பதுங்க வாய்ப்பு உள்ளது. இதனால் உடைந்து கிடைக்கும் விளையாட்டு உபகரணங்களை சரிசெய்வதுடன், பூங்காவில் வளர்ந்து இருக்கும் புதர்களை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்திரப்பா, பைப்லைன் ரோடு, பெங்களூரு.