புகார் பெட்டி
பாழாகும் கண்மாய்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழச்சாக்குளம் மக்கள் பயன்படுத்தும் கண்மாய் கரை பகுதியில் மர்மநபர்கள் மது அருந்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள், பெண்கள், சிறுவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. மேலும் கண்மாய் பகுதியில் மது அருந்தும் மர்மநபர்கள் மது பாட்டில்களை அந்த பகுதியில் உடைத்து விட்டு செல்கின்றனர். எனவே அவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து கண்மாயை பாதுகாக்க வேண்டும்.
கார்த்திக், கீழச்சாக்குளம்.
சுகாதார சீர்கேடு
மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி பேரூராட்சி 14&வது வார்டு பிள்ளையார் கோவில் தெருவில் கழிவு நீர், மழைநீருடன் வெளியேறி சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த சுகாதார சீர்கேடு குறித்து அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தே.கல்லுப்பட்டி பொது மக்கள்.
நோய் பரவும் அபாயம்
மதுரை 37&வது வார்டு செல்லூர் டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதியில் கழிவுநீர் செல்லும் பாதையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இதனால், கழிவுநீர் செல்லும் குழாய் நிரம்பி வழிந்து, கழிவுநீர் சாலையில் செல்கிறது. எனவே அந்த பகுதியில் நோய் பரவி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் பலனில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும்.
பொதுமக்கள், செல்லூர்.
சாலையில் குப்பைகள்
விருதுநகர் மாவட்டம், அல்லம்பட்டி, அனுமன் நகர், பிள்ளையார் கோவில் தெரு சந்திப்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை சாலைகளில் கொட்டி விட்டுச் செல்கின்றனர்.இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாடசாமி, அனுமன் நகர்.
குண்டும்&குழியுமான ரோடு
மதுரை செல்லூர் ரோடு மற்றும் சிம்மக்கல் ரோடு பகுதியில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரபு, கோரிப்பாளையம்.
துர்நாற்றத்தால் அவதி
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா முத்துலிங்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சூர்யா கார்டன் அண்ணாநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாக்கடை கால்வாயில் கழிவுநீர் வெளியேறிச் செல்ல வழியில்லாததால் அங்கு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் பரவி பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. உடனே மாவட்டம் நிர்வாகம் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சூரியன், சூர்யாகார்டன், பேரையூர்
தூர்வார நடவடிக்கை தேவை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி பாரதிநகர் பால்பண்ணை தெருவில் சாக்கடை கால்வாயில் நீண்ட நாட்களாக கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிறைந்து வீட்டிற்குள் வந்துவிடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராம், பரமக்குடி
மின் விளக்குகள் அமைக்கப்படுமா?
மதுரை மாவட்டம் பரவை தரைப்பாலத்தில் இரவு நேரங்களில் மக்கள் செல்லும் பாதையில் மின் விளக்குகள் எரியவில்லை. இதனை பரவை பேரூராட்சி கண்டுகொள்ளவில்லை. மின்விளக்கு இல்லாத காரணத்தினால் பாலத்தில் போதை பழக்கத்தில் அவ்வழியே செல்லும் பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். இதனால் பொதுமக்கள் அந்த வழியில் செல்ல அச்சப்படுகிறர்கள். இதனால் அந்த வழியில் மின் விளக்கை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?
பரவை கிராம மக்கள்.