சாலையோர வியாபாரிகளுக்கு 1,243 தள்ளுவண்டிகள்
தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு 1,243 வண்டிகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை
தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு 1,243 வண்டிகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
விற்பனை மண்டலம்
மதுரை மாநகராட்சியில் பதிவு செய்துள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசின் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்ப்புற சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார இயக்கம் ஆகிய சார்பில் நவீன 4 சக்கர தள்ளுவண்டிகள் வழங்கப்படுகிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் ஆயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகள் உள்ளனர். இந்த நிலையில் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பதிவு செய்யப்பட்டு, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விற்பனை மண்டலம், விற்பனை அல்லாத மண்டலம் என பிரித்து இவர்கள் விற்பனை செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவர்களுக்கு வங்கி மூலம் கடன் உதவி வழங்க ஏதுவாக வங்கி கணக்கு ஆரம்பிக்கப்பட்டு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலங்களில் ரூ.1000 வீதம் நிவாரணத்தொகை முதற்கட்டம் மற்றும் இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டுள்ளன. மொத்த சாலையோர வியாபாரிகள் 12 ஆயிரத்து 604 என கணக்கிடப்பட்டுள்ளன. அதில் அடையாள அட்டை 8 ஆயிரத்து 649 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன.
விதவைப்பெண்கள்
சாலையோர வியாபாரிகளின் நலனுக்காக ரூ.6 கோடியே 78 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மதுரை மாநகராட்சியில் பதிவு செய்துள்ள சாலையோர வியாபாரிகளுக்கு நவீன 4 சக்கர தள்ளு வண்டி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒரே இடத்திலோ அல்லது பல்வேறு பகுதிகளுக்கோ சென்று பொருள்களை விற்பனை செய்யமுடியும். இந்த வண்டி எளிதில் தள்ளிச் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சிறியது மற்றும் பெரியது என இரு வகையான வண்டிகள் வழங்கப்படுகிறது. இந்த வண்டிகளில் பொருள்களை இருப்பு வைக்கும் வசதி, வெயில் மற்றும் மழையில் இருந்து பொருள்களை பாதுகாக்கும் வகையில் மேற்கூரை வசதி, மற்றும் எளிதில் சேதமடையாத வகையில் அலுமினிய தகடால் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஒரு சிறிய வண்டியின் மதிப்பு ரூ.45 ஆயிரம் ஆகும். பெரிய வண்டியின் மதிப்பு ரூ.95 ஆயிரம் ஆகும்.
அதன்படி பெரிய வண்டி 263 சாலையோர வியாபாரிகளுக்கும், 980 சிறிய வண்டிகளும் என மொத்தம் 1,243 வண்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அதில் முதற்கட்டமாக சுமார் 100 பேருக்கு குறிப்பாக ஆதரவற்ற விதவைப்பெண்கள், மாற்றுதிறனாளி, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு புதிய தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் அனிஷ் சேகர் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வெங்கடேசன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு வண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.