பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளி பலி
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
சிவகாசி,
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
வெடி விபத்து
விருதுநகர் மாவட்டம் சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் சரசுவதிபாளையம் உள்ளது. இங்கு கோடீசுவரன் என்பவருக்கு சொந்தமான கேப்வெடிகள் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் நேற்று வழக்கம் போல் வெடிகள் தயாரிக்கப்பட்டன.
இதில் 56&வது அறையில் கேப்வெடி ஷீட்கள் காய வைக்கப்பட்டு இருந்தன. இதை அந்த ஆலையில் பணியாற்றி வந்த சின்னபொட்டல் பட்டியை சேர்ந்த சின்னமுனியப்பன் (வயது 60) எடுக்க வந்துள்ளார். அவற்றை சேகரித்த போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது.
தொழிலாளி சாவு
இதில் தொழிலாளி சின்னமுனியப்பன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தாசில்தார் ராஜ்குமார், தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலைகள் ஆய்வு தனி தாசில்தார் சிவஜோதி மற்றும் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
வெடி விபத்தில் பலியான தொழிலாளி சின்ன முனியப்பனின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.