மழைநீரை அகற்றக்கோரி வக்கீல்கள் நூதன போராட்டம்
வாணியம்பாடி கோர்ட்டு வளாகத்தில் தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றக்கோரி, தண்ணீரில் காகிதகப்பலை விட்டு வக்கீல்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி கோர்ட்டு வளாகத்தில் தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றக்கோரி, தண்ணீரில் காகிதகப்பலை விட்டு வக்கீல்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மழைநீர் தேங்கி உள்ளது
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள அரசினர் தோட்ட வளாகத்தில், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், தாலுகா அலுவலம், வணிக வரி அலுவலகம், டவுன் போலீஸ் நிலையம், தாலுகா போலீஸ் நிலையம், அனைத்து மகளிர் மற்றும் போக்குவரத்து போலீஸ் நிலையம் என அனைத்து போலீஸ் நிலையங்களும், அரசு அலுவலகங்களும் உள்ளன.
தற்போது வாணியம்பாடி பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக வாணியம்பாடி போலீஸ்நிலையங்கள் உள்ள பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் கோர்ட்டு, போலீஸ் நிலையம் மற்றும் தாலுகா அலுவலகத்துக்கு செல்லும் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் அங்கு தேங்கியிருக்கும் தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது.
வக்கீல்கள் போராட்டம்
மழைநீரை அகற்றக் கோரி பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் வக்கீல்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் நேற்று காலை வக்கீல்கள் ஒருமணிநேரம் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மழைநீரை அகற்றக்கோரி அங்கு தேங்கி இருக்கும் மழை நீரில் வக்கீல்கள் காகிதத்தில் கப்பல் விட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசினர் தோட்ட வளாகத்தில் செயல்படும் கோர்ட்டு, போலீஸ்நிலையங்கள், தாலுகா அலுவலகத்துக்கு செல்ல முடியாத நிலை நீடிப்பதால் அங்கு தேங்கி இருக்கும் மழை நீரை அகற்ற வடிகால் அமைத்து நீண்ட நாள் பிரச்சினையை தீர்க்க முன்வர வேண்டுமென பொதுமக்களும், வக்கீல்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.