ஆரணி அருகே; வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி பலி
ஆரணி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டி உடல் நசுங்கி பலியானார். அவரின் குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ. மற்றும் தாசில்தார் நிவாரண உதவிகளை வழங்கினர்.
ஆரணி
ஆரணி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டி உடல் நசுங்கி பலியானார். அவரின் குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ. மற்றும் தாசில்தார் நிவாரண உதவிகளை வழங்கினர்.
பழைய அரசு தொகுப்பு வீடு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த தச்சூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரேணு. இவரின் மனைவி சின்னபாப்பா (வயது 75). அவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
பழைய அரசு தொகுப்பு வீட்டில் சின்னபாப்பா மட்டும் தனிமையில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு அவர் வீட்டில் படுத்துத் தூங்கி கொண்டிருந்தார். இரவு பெய்த கனமழையால் மேற்கூரை சரிந்து வீட்டில் படுத்திருந்த சின்னபாப்பா மீது விழுந்தது. அதில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று அதிகாலை அப்பகுதி கிராம மக்கள் எழுந்து பார்த்தபோது, சின்னபாப்பா வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்திருப்பதையும், இடிபாடுகளில் சிக்கி அவர் இறந்து கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கிராம மக்கள் உடனே ஆரணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு நிலைய அதிகாரி கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சின்னபாப்பா உடலை மீட்டு, ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
நிவாரண உதவிகள்
தகவல் அறிந்ததும் ஆரணி தாசில்தார் சுபாஷ்சந்தர், வருவாய் ஆய்வாளர் வேலு, மண்டல துணைத் தாசில்தார் குமரேசன், ஊராட்சி மன்ற தலைவர் வடிவேலு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மழையால் இடிந்த வீட்டை பார்வையிட்டு விசாரித்தனர்.
அதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ, தாசில்தார் சுபாஷ்சந்தர், மேற்கு ஆரணி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.சுப்பிரமணி ஆகியோர் வந்து அரசின் சார்பில் ரூ.5 ஆயிரமும், எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 ஆயிரமும், 25 கிலோ அரிசி, வேட்டி&சேலை, மண்எண்ணெய் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை சின்னப்பாப்பாவின் குடும்பத்தினருக்கு வழங்கி ஆறுதல் கூறினர். சின்னப்பாப்பா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாம்பு கடித்த உயிரிழந்த ஒரு சிறுமிக்கு தச்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையான சிகிச்சை அளிக்காமல், ஆரணி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்ததாகவும், 108 ஆம்புலன்ஸ் உடனடியாக சம்பவ இடத்துக்கு வரவில்லை என்றும் எம்.எல்.ஏ. விடம் முறையிட்டனர்.
அதன்பேரில் தச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அங்குள்ள வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுரேஷ் பிரகாஷிடம் விவரங்களை கேட்டறிந்தார். அப்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.