நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி எதிரொலி உத்தமபாளையம் ஒன்றியக்குழு தலைவர் பதவி இழந்தார் அ.தி.மு.க.வினர் ஆதரவாக வாக்களித்ததால் பரபரப்பு
உத்தமபாளையம் ஒன்றியக்குழு தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் வாக்களித்ததால் தலைவர் பதவியை இழந்தார்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றியத்தில் மொத்தம் 10 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஜான்சி வாஞ்சிநாதன் ஒன்றியக்குழுத் தலைவராகவும், துணைத் தலைவராக அதே கட்சியை சேர்ந்த மூக்கம்மாள் கெப்புராஜும் இருந்தனர். தலைவர், துணை தலைவர் உள்பட அ.தி.மு.க.வுக்கு 7 கவுன்சிலர்களும், தி.மு.க.வுக்கு 3 கவுன்சிலர்களும் உள்ளனர்.
இந்தநிலையில் துணைத்தலைவர் மூக்கம்மாள் கெப்புராஜ் தலைமையில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் 9 பேர் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யாவிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து தலைவர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு, வாக்கெடுப்பு சிறப்பு கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்தது. இதற்கு ஆர்.டி.ஓ.கவுசல்யா தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் மூக்கம்மாள் கெப்புராஜ் உள்பட அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேரும், தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேரும் கலந்து கொண்டனர். ஒன்றியக்குழு தலைவர் ஜான்சி வாஞ்சிநாதன் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
பதவியை இழந்தார்
கூட்டத்தில் தீர்மானத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கைகளை உயர்த்தி தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து 9 கவுன்சிலர்களும் கைகளை உயர்த்தினார்கள். இதைத்தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் அனைத்து கவுன்சிலர்கள் ஆதரவோடு வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஜான்சி வாஞ்சிநாதன் ஒன்றியக்குழு தலைவர் பதவியை இழந்தார்.
இந்தநிலையில் ஒன்றிய அலுவலகம் முன்பு நின்று கொண்டு இருந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் உத்தமபாளையம்&கம்பம் செல்லும் சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா மற்றும் போலீசார் விரைந்து அவர்களை கலைய செய்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதனிடையே ஒன்றியக்குழு தலைவர் ஜான்சி வாஞ்சிநாதன் தேனியில் மாவட்ட கலெக்டர் முரளிதரனை சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார். வாக்கெடுப்பின்போது நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க. துணைத் தலைவர் உள்பட 6 கவுன்சிலர்களும் அ.தி.மு.க.கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.