தி.மு.க.-கூட்டணி கட்சியினர் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம்
தேனி உள்பட 98 இடங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி:
மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி தேனி மாவட்டத்திலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதன்படி தேனி நகரில் உள்ள தி.மு.க. அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்கினார். பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் முன்னிலை வகித்தார். தேனி நகர பொறுப்பாளர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தேனி அல்லிநகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். தேனியில் உள்ள தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு முன்பு ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் அன்னஞ்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் விடுதலைசேகர் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டங்களின் போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
போடி
போடியில் உள்ள வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் முன்பு கருப்புக்கொடிகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. நகர செயலாளர் செல்வராஜ், முன்னாள் நகர செயலாளர்கள் முகமது பசீர், ராஜாரமேஷ், போடி நகரசபை முன்னாள் துணைத்தலைவர் சங்கர், வக்கீல் கனி, இளைஞர் அணி செயலாளர் வெங்கடேஷ்குமார், வர்த்தக அணி அமைப்பாளர் அழகரசன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போடி நகர காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து இந்திரா காந்தி சிலை முன்பு கருப்புக்கொடி ஏந்தி நகர தலைவர் முசாக் மந்திரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் சன்னாசி முன்னிலை வகித்தார். இதில் நகர துணைத்தலைவர் ரவி, கனகராஜ், சின்னச்சாமி, செயலாளர் ரவிச்சந்திரன், மகளிர் அணியினர் மற்றும் காங்கிரசார் திரளாக கலந்துகொண்டனர்.
போடி சண்முகசுந்தரபுரத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு, மாநில பொதுக்குழு உறுப்பினர் தர்மர் தலைமையில், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் மாரிமுத்து, காளிமுத்து ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இளைஞர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஹரிஹரன், செயலாளர் தம்பையன், பகுதி தலைவர்கள் கணபதி ஜெயக்கொடி, நாசர், பொன் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரியகுளம்
பெரியகுளம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் எ.புதுப்பட்டியில் மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் எல். மூக்கையா தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டியன், எண்டப்புளி ஊராட்சி தலைவர் சின்ன பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய பொருளாளர் ராஜமாணிக்கம், கிளைச்செயலாளர் ஜெயபாலன், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி சட்டக்குழு உறுப்பினர் கற்பூரசுந்தரம், திராவிடர் கழக நிர்வாகி அன்புக்கரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வடுகப்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேரூர் செயலாளர் காசி விஸ்வநாதன் தலைமை தாங்கினார். இதுபோல பெரியகுளம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
98 இடங்கள்
தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் தேனி, பெரியகுளம், கம்பம், ஆண்டிப்பட்டி, சின்னமனூர், உத்தமபாளையம் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 98 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பல இடங்களில் கட்சி நிர்வாகிகள் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.