ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி; அதிர்ச்சியில் தாய் சாவு

ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி; அதிர்ச்சியில் தாய் சாவு

Update: 2021-09-20 16:37 GMT
பாகூர், செப்-
ஆற்றில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் கேட்டு, அதிர்ச்சியில் தாயார் உயிரிழந்தார். 
நீரில் மூழ்கி சாவு 
புதுச்சேரி மேட்டுப்பாளையம் அருகே உள்ள சண்முகாபுரத்தை சேர்ந்தவர் ஜீவா (வயது 25). இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றுக்கு சென்றார். அங்கு நண்பர்களுடன் சேர்ந்து மீன் பிடித்தார். பின்னர் அவர்கள் ஆற்றில் இறங்கி மகிழ்ச்சியாக குளித்தனர். 
சற்று ஆழமான பகுதிக்கு சென்ற ஜீவா சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், ஜீவாவை நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தவளக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்ற வேலுவின் உடலை தேடினர். இதற்கிடையே மாலையில் இருள் சூழ்ந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. 
இந்த நிலையில் ஜீவாவின் உடன் நேற்று காலை ஆற்றங்கரையில் ஒதுங்கியது. இது பற்றி அறிந்த தவளக்குப்பம் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
தாயும் பலி 
இதற்கிடையே ஜீவா ஆற்றில் மூழ்கிய செய்தி அவரது தாயார் முத்துலட்சுமிக்கு (50) தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் மயங்கி விழுந்தார். அவர் ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று காலை முத்துலட்சுமி பரிதாபமாக இறந்துபோனார்.
இது குறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்