முன்விரோதத்தில் விவசாயி கழுத்தை அறுத்து கொலை
தவளக்குப்பம் அருகே முன்விரோதத்தில் விவசாயி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உடலை எடுக்கவிடாமல் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி, செப்-
தவளக்குப்பம் அருகே முன்விரோதத்தில் விவசாயி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உடலை எடுக்கவிடாமல் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயி
புதுவை மாநிலம் தவளக்குப்பம் அருகே டி.என்.பாளையம் உடையார் தெருவை சேர்ந்தவர் அனந்தராமன் என்கிற முருகன் (வயது 51), விவசாயி. இவருக்கு தனபாக்கியம் என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். அனந்தராமனுக்கு அருகில் உள்ள இருளர்குடியிருப்பு பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இங்கு கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
அனந்தராமன் தினமும் காலையில் விவசாய நிலத்துக்கு சென்று பணிகளை கவனிப்பார். மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு செல்லும் அவர், மீண்டும் விவசாய நிலத்துக்கு வந்துவிட்டு மாலையில் வீடு திரும்புவார். அதன்படி நேற்று காலையில் விவசாய நிலத்துக்கு சென்ற அனந்தராமன் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தார். பிறகு மதியம் 3 மணியளவில் மீண்டும் விவசாய நிலத்துக்கு சென்று, வேலைகளை கவனித்தார்.
கழுத்தை அறுத்து கொலை
அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், அனந்தராமனிடம் தகராறு செய்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அவர்கள், தன்னந்தனியாக இருந்த அனந்தராமனை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார். அவர் இறந்ததை உறுதி செய்துகொண்ட மர்மநபர்கள், அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இந்த நிலையில் அனந்தராமன் பிணமாக கிடப்பதை பார்த்த இருளர்குடியிருப்பு மக்கள் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு தெரிவித்தனர். உடனே போலீஸ் சூப்பிரண்டுகள் லோகேஸ்வரன், ஜிந்தா கோதண்டராமன், அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அனந்தராமன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அனந்தராமன் கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. மேலும் மார்பில் 3 கத்திக்குத்து காயங்கள் இருந்தன. உடலை பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க ஆம்புலன்சுக்காக போலீசார் காத்திருந்தனர்.
உறவினர்கள் போராட்டம்
இதற்கிடையில் அனந்தராமன் படுகொலை செய்யப்பட்ட தகவல் அந்த பகுதியில் பரவியது. இதை அறிந்த அவரது உறவினர்கள், பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள், இந்த பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகம் உள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை என்று போலீஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் முன்விரோதம் காரணமாக சிறுவர்கள் கஞ்சா புகைத்துக்கொண்டு அனந்தராமனை கொலை செய்துள்ளனர், அவர்களை கைது செய்யும் வரை உடலை எடுத்துச்செல்ல விடமாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கொலையாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன்பிறகு அனந்தராமன் உடலை ஆம்புலன்சில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
முன்விரோத தகராறு
இந்த படுகொலை தொடர்பாக தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனந்தராமனுக்கும், அவரது எதிர்வீட்டை சேர்ந்தவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று காலை இருகுடும்பத்துக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சினையில் அனந்தராமன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி, கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.