திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் 2 ஆண்டுகளில் திருப்பதி கோவில் போன்று மாற்றப்படும் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் தகவல்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் 2 ஆணடுகளில் திருப்பதி கோவில் போ்ன்று மாற்றப்படும் என்று அறநிலையத்துறைஆணையர் குமரகுருபரன் தெரிவித்தார்;
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், 2 ஆண்டுகளில் திருப்பதி கோவில் போல் மாற்றம் கொண்டு வரப்படும் என அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
ஆணையர் ஆய்வு
தமிழக அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் நேற்று மாலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். கோவில் வளாகத்தில் உள்ள விடுதிகள், கலையரங்கம், கார் பார்க்கிங், அன்னதானம் மண்டபம், கந்த சஷ்டி மண்டபம், நாழிகிணறு பஸ் நிலைய வளாகம், நாழிகிணறு நடைபாதை, கடற்கரை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அவர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாஸ்டர் பிளான்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளர்ச்சிக்கு மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ.150 கோடியில் திருப்பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம். இப்பணிகள் நிறைவேற சுமார் 2 ஆண்டுகள் ஆகும். முக்கியமாக கார் பார்க்கிங் மாற்றப்படும்.
முழு நேர அன்னதானத்தில் கூடுதல் பக்தர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருப்பதி கோவில் போன்று...
கோவில் வளாகத்தில் உள்ள தேவையற்ற கட்டிடங்கள் அப்புறப்படுத்தபடும். இக்கோவில் 2 ஆண்டுகளில் திருப்பதி கோவில் போல் மாற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், பயிற்சி கலெக்டர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோகிலா, தாசில்தார் முருகேசன், கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, உதவி ஆணையர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் முருகன், உதவி பொறியாளர் சந்தாணகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.