திண்டுக்கல்லில் வியாபாரி கொலை வழக்கில் சிக்கிய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திண்டுக்கல்லில் வியாபாரி கொலை வழக்கில் சிக்கிய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் எருமைக்கார தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42). இவர், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். கடந்த மாதம் 7&ந்தேதி இவர், கடையில் இருந்த போது அங்கு வந்த மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் மணிகண்டனை சரமாரியாக வெட்டி சாய்த்தது.
இதுதொடர்பாக நகர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த சுந்தர பாண்டியன் (39), சத்திய கீர்த்தி (29) உள்பட 11 பேரை கைது செய்தனர். இவர்களில் 6 பேர் கலெக்டர் உத்தரவுப்படி ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் வியாபாரி கொலை வழக்கில் கைதான சின்னையா என்ற சுழியன் (29), சுள்ளான் என்ற பிரசன்னகுமார் (21), பாலகிருஷ்ணன் (25), சுரேஷ் என்ற என்ற கருப்பையா (23) ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதிக்கும்படி மாவட்ட கலெக்டர் விசாகனுக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து சின்னையா உள்பட 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.