கண்காணிப்பு ஆபரேட்டர் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க போலீசார் திட்டம்

கண்காணிப்பு ஆபரேட்டர் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க போலீசார் திட்டம்

Update: 2021-09-20 14:13 GMT
கோத்தகிரி

கோடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கண்காணிப்பு ஆபரேட்டர் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக கோத்தகிரி தாசில்தாரிடம் போலீசார் மனு அளித்துள்ளனர்.

கோடநாடு கொலை, கொள்ளை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. 

இங்கு கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் படுகொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். 

இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே இந்த வழக்கில் முழுவிசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

 இதையடுத்து தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக ஜாமீனில் உள்ளவர்கள், விடுபட்ட சாட்சிகள் உள்பட பலரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கில் சம்பவத்தன்று, அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கண்காணிப்பு கேமரா ஆபரேட்டர் மரணம்

இதற்கிடையே கோடநாடு எஸ்டேட்டில் கண்காணிப்பு கேமரா ஆபரேட்டராக பணியாற்றிய இருந்த தினேஷ்குமார் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 3&ந் தேதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

 தினேஷ்குமாருக்கு கண்பார்வை மங்கியதால் ஏற்பட்ட மன உளைச்சல் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததது. எனவே அது தற்கொலை என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

மேலும் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கும், தினேஷ்குமார் தற்கொலைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று நீலகிரி மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா ஏற்கனவே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 ஆனால் தினேஷ்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் கூறி வந்தனர். இந்த நிலையில் தினேஷ்குமார் மரணம் தொடர்பாக மீண்டும் விசாரிக்க தனிப்படை போலீசார் திட்டமிட்டு உள்ளனர். 

தாசில்தாரிடம் மனு

இந்த நிலையில், கோடநாடு வழக்கின் விசாரணை அதிகாரியான கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் நேற்று காலை கோத்தகிரி தாசில்தார் சீனிவாசனை நேரில் சந்தித்து தினேஷ்குமாரின் மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணை மேற்கொள்வது தொடர்பாக மனு ஒன்றை அளித்தார். இது இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கண்காணிப்பு ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை தொடர்பாக நீதிமன்றத்தின் முன் அனுமதி பெற்று மீண்டும் விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. 

தாசில்தாரிடம், போலீசார் மனு அளித்து உள்ளதால், தினேஷ்குமாரின் உடல் மறு பிரேதப்பரிசோதனை செய்யப்படுகிறதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஊழியர்களிடம் விசாரணை

இந்த வழக்கை விசாரித்து வரும் தனிப்படை தலைமை விசாரணை அதிகாரியான கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் நேற்று மாலை கோடநாடு எஸ்டேட் அலுவலகத்திற்கு சென்றனர். 

அங்கு தினேஷ்குமாருடன் பணிபுரிந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். 

இதையடுத்து கோத்தகிரி காவல் நிலையத்திற்கு வந்த கூடுதல் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் வேல்முருகனுடன் வழக்கு தொடர்பாக சிறிது நேரம் ஆலோசனை நடத்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

மேலும் செய்திகள்