தூத்துக்குடியில் வாறுகால்கள் தூர்வாரும் பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடியில் வாறுகால்கள் தூர்வாரும் பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வாறுகால்கள் தூர்வாரும் பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தூர்வாரும் பணி
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டம் முழுவதும் வாறுகால்கள் தூர்வாரும் பணிகள் திட்டமிடப்பட்டு உள்ளன. இந்த திட்டம் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி அண்ணாநகர் 3-வது தெருவில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி, தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஒட்டு மொத்தமாக தூர்வாறும் பணிகளை தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு அமைச்சர் ஆய்வு செய்தார்.
700 பணியாளர்கள்
பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள கால்வாயில் மண் அதிகமாக தேங்கியுள்ள பகுதிகளில் துப்புரவு பணியாளர்களின் மூலம் தூர்வார திட்டமிடப்பட்டு உள்ளது. ஒரு வார காலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணியில் சுமார் 700 துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கழிவு நீர் கால்வாய் மட்டுமல்லாமல் தெருக்களில் தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் கற்கள் அனைத்து பகுதிகளிலும் துப்புரவு செய்யப்படும். ஏற்கனவே எங்கெல்லாம் தெருக்களில் மண் அடைப்பு ஏற்பட்டு உள்ளதோ அந்த பகுதியில் மண் அடைப்பு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் வருகிற சனிக்கிழமை வரை நடக்கிறது. நகரத்தில் உள்ள அனைத்து கால்வாய்களும் சுத்தம் செய்யப்படும். மழை காலங்களில் தெருவோர சாலைகளில் தேங்கும் மழை தண்ணீரை தெருக்களில் தேங்கவிடாமல,் அதனை மாநகராட்சியின் மூலம் அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் சேகரிக்கும் பணியும் நடந்து வருகிறது.
மழைக்கு முன்...
மழை காலம் தொடங்குவதற்குள் தற்காலிகமாக டிரான்ஸ்பார்மர் அமைக்கவும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த மழை காலங்களின்போது 25 பகுதிகள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டன. தற்காலிகமாக அப்பகுதிகளில் தண்ணீரை தேங்கவிடாமல் செய்வதற்காக தொட்டி மற்றும் மோட்டர், பூமியில் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் அதிக மழை பெய்யும் போது தண்ணீர் தேங்காமல் சம்ப் மற்றும் மோட்டர் மூலம் குழாயின் வழியாக வெளியேற்றும் பணியும், மழைக்காலத்துக்கு முன்னால் நடைபெற்று வரும் ஒப்பந்த பணியையும் முடிப்பதற்கும் வேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழை காலத்தில் வேலை எதுவும் செய்ய முடியாது. வருகின்ற மழை காலத்தில் மாநகராட்சி பகுதிகளில் மக்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருக்க திட்டமிட்டு தயாராக இருக்கிறது. மழை நீர் அனைத்தையும் வெளியேற்றுவதற்கான பணியும் நடைபெற்று வருகிறது. சீர்மிகு நகர திட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளும் மழை காலத்திற்குள் முடிப்பதற்காக பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தடுப்பூசி
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் வரை 22 கிராமங்களில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தம் 8 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று கூறினார்.
நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் வித்யா, மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ், உதவி பொறியாளர் சரவணன், முக்கிய பிரமுகர் திரு.ஆனந்தசேகரன் மற்றும் அலுவலர்கள், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.