டாஸ்மாக் அருகே பெட்டிக்கடைகளில் மது அருந்த அனுமதித்தால் கடும் நடவடிக்கை டாஸ்மாக் மேலாளர் அய்யப்பன் எச்சரிக்கை

டாஸ்மாக் அருகே பெட்டிக்கடைகளில் மது அருந்த அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அய்யப்பன் எச்சரித்துள்ளார்.

Update: 2021-09-20 11:41 GMT
தூத்துக்குடி:
டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அருகில் அனுமதியற்ற மதுக்கூடம், பெட்டிக்கடைகளில் மது அருந்த அனுமதித்தால் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அ்ய்யப்பன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அய்யப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெற்ற மதுபான கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் அனைத்தும் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன. ஆனால் மதுக்கடைகளுக்கு அருகில் அனுமதியற்ற மதுக்கூடம், பெட்டிக்கடைகளில் வைத்து மது சிலர் அனுமதித்து வருகின்றனர். அவ்வாறு மது அருந்த அனுமதிப்பது தெரியவந்தால் போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குழு
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபான கடைகளுக்கு அருகே அனுமதியற்ற மதுக்கூடங்கள் இயங்கி வருவதை கண்டறிவதற்காக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் உத்தரவு படி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் வட்டாரம் வாரியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் தண்ணீர், டம்ளர், தின்பண்டங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்தல், மது அருந்த அனுமதித்தது தெரியவந்தது. அதன்பேரில் மெஞ்ஞானபுரம் பெருமாள் பாஸ்கர், தூத்துக்குடி பிரையண்ட்நகர் ஆறுமுகம், சிதம்பரம் நகர் மாரியப்பன், நாகலாபுரம் நாகராஜன், ஸ்ரீவைகுண்டம் ராமச்சந்திரன், சி.ஜி.இ. காலனி மாரியப்பன், இந்திராநகர் ராஜன் ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எனவே டாஸ்மாக் கடை அருகே அனுமதியற்ற மதுக்கூடம் மற்றும் பெட்டிக்கடைகளில் மது அருந்த அனுமதிப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்