மாமல்லபுரத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி, விற்பனை மையம்

மாமல்லபுரத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி, விற்பனை மையத்தை கதர்துறை முதன்மை செயலாளர் அபூர்வா திறந்து வைத்தார்.

Update: 2021-09-20 10:57 GMT
கொலு பொம்மைகள் கண்காட்சி

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் கைவினை கலைஞர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தமிழகம் முழுவதும் பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறது. இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கொலு பொம்மைகளை வழங்குவதற்காக பூம்புகார் நிறுவனம் ஆண்டுதோறும் சென்னை, மாமல்லபுரம் மற்றும் முக்கிய இடங்களில் கொலு பொம்மைகள் கண்காட்சி என்ற சிறப்பானதொரு கண்காட்சியினை நடத்தி வருகிறது. உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இந்த ஆண்டு முதன்முறையாக கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாமல்லபுரத்தில் உள்ள பூம்புகார் கண்காட்சி திடலில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கப்பட்டது.

நவராத்திரி வரை மாமல்லபுரத்தில் இந்த கண்காட்சி நடத்தப்பட உள்ளது. மாமல்லபுரம் பூம்புகார் கண்காட்சி திடலில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை மையத்தை தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் மேலாண் இயக்குனர் ஷோபனா முன்னிலையில் தமிழ்நாடு அரசு கதா்துறை முதன்மை செயலாளர் அபூர்வா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் களிமண், காகிதக்கூழ், பளிங்குத்தூள், மரம், கொல்கத்தா களிமண், சுடு களிமண் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் காட்சிபடுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தசாவதாரம் செட், இராமாயண செட், அஷ்டலட்சுமி செட், விநாயகர், குபேரன், திருமலை, கோபியர் நடனம், தர்பார், கிரிக்கெட் விளையாட்டு, சங்கீத மும்மூர்த்திகள், வைகுண்டம், மாயா பஜார், கார்த்திகை பெண்கள் போன்ற கருத்து சார்ந்த சிறப்பான கொலு பொம்மைகள் விற்பனைக்கும் காட்சிக்கும் வைக்கப்பட்டு இருந்தன. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் புதுச்சேரி, ராஜஸ்தான், கொல்கத்தா, ஆந்திரா மற்றும் கர்நாடகம் போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் தயாரிக்கப்பட்ட பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி நவராத்திரி வரை தினந்தோறும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாமல்லபுரம் கண்காட்சி திடலில் நடைபெற உள்ளது.

இலவச அனுமதி

இந்த கண்காட்சியை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று தொடக்க நாள் விழாவை முன்னிட்டு சென்னை இசை கல்லூரி மாணவிகளின் வீணை இசை நிகழச்சியும், புல்லாங்குழல் வாசிப்பு நிகழ்ச்சியும் நடந்தது. கண்காட்சி தொடக்க நாள் விழாவில் தனலட்சுமி சீனிவாசன் என்ஜினீயரிங் கல்லூரி தலைமை செயல் இயக்குனர் ஆர்.விஜயராஜ், கல்லூரி உதவி பொது மேலாளர் சுரேஷ், மாமல்லபுரம் பூம்புகார் கிளை மேலாளர் வேலு மற்றும் சுற்றுலா பயணிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்