தமிழகத்தில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள மருத்துவ கட்டமைப்புகள் தயார்-சேலத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வந்தால், அதனை எதிர்கொள்ள மருத்துவ கட்டமைப்புகள் தயாராக உள்ளன என்று சேலத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-19 22:27 GMT
சேலம்:
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வந்தால், அதனை எதிர்கொள்ள மருத்துவ கட்டமைப்புகள் தயாராக உள்ளன என்று சேலத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி முகாம்
சேலம் மாவட்டம் வீரபாண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பிற்பகல் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்ததோடு அங்கு வைக்கப்பட்டிருந்த டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு பயன்படுத்தப்படும் கருவிகளை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து அவர் சேலம் மணக்காடு காமராஜர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தடுப்பூசி சிறப்பு முகாமை ஆய்வு செய்தார். 
பேட்டி
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:- 
தமிழகத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு கூடுதலாக ஒதுக்கீடு செய்து தந்தால் அதை மக்களுக்கு போடுவதற்கு தயாராக உள்ளோம். இந்திய அளவில் இதுவரை 62 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. அதில், தமிழகத்தை பொறுத்தவரையில் 56 சதவீதம் ஆகும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஜனவரி 16-ந் தேதி தொடங்கி மே 6-ந் தேதி வரை 63 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருந்தது. அப்போது, தேவையான அளவு தடுப்பூசி இருப்பு இருந்தது. அரசு உரிய கவனம் செலுத்தியிருந்தால் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக ஆகியிருக்கும். தற்போது தடுப்பூசி போடுவது குறித்து மக்களிடம் மனநிலை மாறியிருக்கிறது. ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டு செல்கிறார்கள். 
தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்தால் அதனை மக்களுக்கு போடுவதற்கு போதுமான கட்டமைப்புகள் உள்ளன. தற்போது தடுப்பூசி முகாம் திருவிழா போல் நடக்கிறது. 
மருத்துவ கட்டமைப்புகள் தயார்
தமிழகத்தில் தடுப்பூசி போடப்படுவதால் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வருகிறது. சென்னை, விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 80 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. இதுதவிர, 7 மாவட்டங்களில் 70 சதவீதமும், 10 முதல் 15 மாவட்டங்களில் 60 சதவீதமும் நோய் எதிர்ப்பு சக்தி கூடியிருக்கிறது. கொரோனா 3-வது அலை வரக்கூடாது. ஒருவேளை வந்தால் அதை எதிர்கொள்ள தேவையான மருத்துவ கட்டமைப்புகள் தயாராக உள்ளன. எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. அதேபோல், டெங்கு காய்ச்சலை தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 
சேலம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 27 லட்சத்து 98 ஆயிரத்து 204 பேர் உள்ளனர். இவர்களில் 15 லட்சத்து 18 ஆயிரத்து 166 பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். இது 54 சதவீதம் ஆகும். அதேபோல், 4 லட்சத்து 43 ஆயிரத்து 868 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். இது 16 சதவீதம் ஆகும். கடந்த 12-ந் தேதி நடந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் 1 லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது. அதேபோல், இன்றைய தினமும் 79 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் நளினி, தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை செயலாளர் டாக்டர் தருண் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்