திருச்சியில் பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருச்சியில் பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி
திருச்சி கிராப்பட்டி காந்திநகரை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 43). இவர் டீசல் பம்ப் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சுதா. இவர்களுடைய மகன் கீர்த்திவாசன் (14). இவர், திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கீர்த்திவாசன் வீடியோகேம் விளையாடுவதில் அதிக ஆர்வத்துடன் இருந்துள்ளார். இதனால் சரிவர சாப்பிடாமல் ஒருநாளைக்கு ஒருவேளை மட்டும் சாப்பிட்டு வந்துள்ளார். இதனால், அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டின் அனைவரும் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது வீட்டில் படுத்து இருந்த கீர்த்திவாசனை காணாததால் அவரை தேடி பார்த்தனர். அப்போது அவர் ஹாலில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கியுள்ளார். இதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அரவிந்த் தனது மகன் வயிற்றுவலி காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக அளித்த புகாரின்பேரில், எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.