‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939078888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-09-19 20:39 GMT
சாக்கடை வசதி தேவை
மதுரை மாநகராட்சி 3&வது வார்டு கருப்பசாமி நகர் 2&வது தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதன் காரணமாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் ஆங்காங்கே குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடாகவும் காணப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இப்பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும். 
பிரபாகரன், மதுரை. 
போக்குவரத்து நெரிசல் 
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. மேலும், பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் செல்லாமல் பஜார் பகுதியில் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இப்பகுதியில் போக்குவரத்து போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
வனிதா, வத்திராயிருப்பு. 

குண்டும், குழியுமான சாலை 
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா கீழாய்க்குடி கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. இதன் காரணமாக இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் இப்பகுதி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாகன ஓட்டிகளின் நலன்கருதி இங்கு சாலை வசதி ஏற்படுத்தப்படுமா?
பொதுமக்கள், கீழாய்க்குடி. 

பஸ்கள் நிற்குமா? 
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தீர்த்தாண்டதானம் கிராமத்தில் பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், வியாபாரிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமப்படுகின்றனர். குறிப்பிட் நேரத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே, இங்கு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். 
நாராயணன், தீர்த்தாண்டதானம். 
வேகத்தடை வேண்டும் 
மதுரை மாவட்டம் கிழக்கு வட்டம் மேலமடை பஸ் நிறுத்தம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். ஆனால் இப்பகுதியில் வேகத்தடை இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் மின்னல் வேகத்தில் செல்கின்றனர். அடிக்கடி விபத்து நடப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சம் அடைகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். 
இளங்கோவன், மேலமடை. 
கூடுதல் டிரான்ஸ்பார்மர் தேவை 
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் வடவன்பட்டி கிராமத்தில் அடிக்கடி மின்சார உயர் அழுத்தம் மற்றும் தாழ்வழுத்தம் ஏற்படுகிறது. இதன் காரணமாக சில வீடுகளில் மின்விளக்குகள் மற்றும் மின் சாதன பொருட்கள் பழுதடைகின்றன. எனவே, இப்பகுதியில் கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைத்து சீராக மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், வடவன்பட்டி. 

நாய்கள் தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டு கிராமத்தில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருநாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்லும் போது நாய்கள் குறுக்கே பாய்வதால் விபத்து ஏற்படுகிறது. மேலும், தெருவில் செல்பவர்களையும் நாய்கள் கடிக்க துரத்துகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பொதுமக்களின் நலன்கருதி தொல்லை தரும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும். 
அசோக்குமார், வண்ணாங்குண்டு. 

வாகன ஓட்டிகள் அவதி 
மதுரை அழகர்கோவில் செல்லும் சாலையில் வெள்ளியங்குன்றம்நத்தம் அலங்காநல்லூர் செல்லும் பிரிவு சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே அந்த பகுதியில் உள்ள பழுதடைந்த சாலையை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.
வக்கீல் அப்துல்நபி, அண்ணாநகர்.

அடிப்படை வசதிகள் 
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி 25&வது வார்டில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அடிப்படை உதவிகளை அரசு நிறைவேற்றி கொடுக்க வேண்டும். அங்குள்ள அரசு மருத்துவமனை பகுதியில் அடிக்கடி விபத்து நடந்த வண்ணம் உள்ளது. வேகத்தைடை வைத்தால் விபத்து ஏற்படாமல் இருக்கும். இதற்கும் அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
பிரியா, பரமக்குடி.
தேங்கி நிற்கும் கழிவுநீர் 
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி டவுன், 15&வது வார்டு, நேதாஜி நகர், இந்தியன் ஆயில் பின்புறம் உள்ள தெருவில் உள்ள கழிவு நீர் செல்லும் வாருகால் பக்கவாட்டு சுவர் சேதம் அடைந்துள்ளது. இதனால், கழிவு நீர் வெளியேறி சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அருகில் உள்ள வீடுகளில் துர்நாற்றம் வீசுகின்றது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சதீஷ்ராஜன், உசிலம்பட்டி.

மேலும் செய்திகள்