மின்னல் தாக்கி பெண் பலி
கமுதி அருகே மின்னல் தாக்கியதில் பெண் பலியானார்.;
கமுதி,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோவிலாங்குளம், நெறுஞ்சிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சுற்றி நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. நெறிஞ்சிப்பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் பருத்தி பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ் மனைவி முத்துலட்சுமி (வயது 35), நாகசெல்வம் மனைவி கற்பகவள்ளி (32), சண்முகம் மனைவி அருணாச்சலம் (42) ஆகியோர் மீது மின்னல் தாக்கியதில் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஆம்புலன்சில் 3 பேரும் கமுதி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு டாக்டர் பரிசோதித்ததில் கற்பகவள்ளி ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிய வந்தது. மற்ற 2 பேரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதுகுறித்து கோவிலாங்குளம் கிராம நிர்வாக அலுவலர் சரவணக்குமார் உள்ளிட்ட வருவாய் துறையினர் நேரில் சென்று விசாரனை நடத்தினார்கள்.