ரெயில்வே அதிகாரி வீட்டில் ரூ 20 லட்சம் நகை கொள்ளை

கோவை கவுண்டம்பாளையம் அருகே ரெயில்வே அதிகாரி வீட்டில் ரூ.20 லட்சம் கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-19 18:34 GMT

துடியலூர் 

கோவை கவுண்டம்பாளையம் அருகே ரெயில்வே அதிகாரி வீட்டில் ரூ.20 லட்சம் கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரெயில்வே அதிகாரி 

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம் ராகவேந்திரா பகுதியை சேர்ந்தவர் கோபால்ராஜ் (வயது 56). இவர் காஷ்மீரில் ரெயில்வேதுறையில் தலைமை பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

அதன்படி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வீட்டிற்கு குடும்பத்துடன் வந்தார். பின்னர் அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் காஷ்மீர் சென்றுவிட்டார். அவருடைய வீட்டை உறவினர்கள் பராமரித்து வருகிறார்கள். 

ஜன்னல் கம்பிகள் உடைப்பு 

இந்த நிலையில் கோபால்ராஜ் வீட்டின் ஜன்னல் கதவு திறக்கப்பட்டு அதில் இருந்த கம்பிகள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. 

இதை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கோபால்ராஜின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தார். உடனே அவர் இது குறித்து துடியலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தன. 

அதில் இருந்த 59 பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த ஏராளமான வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களை காணவில்லை. 

ரூ.20 லட்சம் நகை கொள்ளை 

அவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கைவிரல் ரேகை நிபுணர்களும் விரைந்து அங்கு பதிவாகி இருந்த கைவிரல் ரேகைகளை பதிவு செய்தனர். 

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில் 2 பேர் வந்து ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. 

2 பேர் கைது 

இதையடுத்து அந்த நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் கோவை நாராயணசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்த கண்ணன் (40), அத்திபாளையத்தை சேர்ந்த (21) என்பது தெரியவந்தது. 

உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் நகையை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்