கழிவுநீர் ஓடை சீரமைக்கப்பட்டது
மேலராமன்புதூர் சைமன்நகர் பகுதியில் கழிவுநீர் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை தேங்கி நின்று தொற்று நோய் பரவும் அபாயம் இருந்தது. இதுகுறித்து “தினத்தந்தி” புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, துப்புரவு பணியாளர்கள் நடவடிக்கை எடுத்து ஓடையில் இருந்த அடைப்பை நீக்கி தேங்கி நின்ற சாக்கடையை அகற்றி சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த துறையினருக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தொற்று நோய் பரவும் அபாயம்
பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை சந்திப்பு, பெதஸ்தா வணிக வளாகம் அருகே கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த ஓடையில் குப்பைகள் நிறைந்து கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஓடையை சுத்தம் செய்து கழிவுநீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அஜய், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை.
ஆபத்தான மேல்நிலை நீர் தேக்க தொட்டி
தோவாளை ஊராட்சிக்குட்பட்ட தெள்ளாந்தி பகுதியில் அம்மா மினி கிளினிக் அருகே மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்தேக்க தொட்டி பல ஆண்டுகளாக சேதமடைந்து பயன்பாட்டில் இல்லாமல் காணப்படுகிறது. தூண்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எப்போது வேண்டுமானாலும் நீர் தேக்க தொட்டி இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரஜினிகாந்த், தெள்ளாந்தி.
சாலையில் பள்ளம்
மேலகிருஷ்ணன்புதூரில் இருந்து புத்தளம் செல்லும் சாலையில் தெற்கு பணிக்கன்குடியிருப்பு பகுதியில் சாலையின் மையப்பகுதியில் பள்ளம் ஒன்று உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கோவிந்தராஜன், தெற்கு பணிக்கன்குடியிருப்பு.
ஜல்லிகள் பெயர்ந்த சாலை
வெள்ளாடிச்சிவிளை அகமது நகர் பகுதியில் உள்ள சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சம்நாத், வெள்ளாடிச்சிவிளை.
தடுப்பு சுவர் கட்ட வேண்டும்
திங்கள்நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட மாங்குழி 13-வது வார்டில் நாடார் குளம் உள்ளது. இந்த குளத்தையொட்டி சாலை செல்கிறது. தற்போது குளத்தின் கரைபகுதி இடிந்து வருகிறது. இதனால், அந்த வழியாக வாகனங்கள் செல்லும் போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, குளத்தின் கரை பகுதியை சீரமைத்து, தடுப்பு சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜோசப் நேவிஸ், மாங்குழி.