கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் கடைகள் தியேட்டர்கள் மூடப்பட்டன
கொரோனா பரவலை தடுக்க கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் கடைகள், தியேட்டர்கள் மூடப் பட்டன.
கோவை
கொரோனா பரவலை தடுக்க கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் கடைகள், தியேட்டர்கள் மூடப் பட்டன.
கூடுதல் கட்டுப்பாடுகள்
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கிருந்து பலர் கோவை வந்து செல்வதால் கோவை மாவட்டத்திலும் தொற்று அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே கொரோனா பரவலை தடுக்க கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையிலும், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும் மளிகை, காய்கறி, பால், மருந்தகம் ஆகிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
கடைகள், தியேட்டர்கள் மூடல்
அதன்படி நேற்று கோவை மாநகரில் உள்ள ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, கிராஸ்கட் ரோடு, டவுன்ஹால், ராஜவீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகள், செல்போன் கடைகள், நகை கடைகள், வணிக வளாகங்கள், புத்தக கடைகள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
இதன் காரணமாக அந்த பகுதி ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் மளிகை, காய்கறி, பாலகம், மருந்தகங்கள் மட்டும் வழக்கம்போல் திறந்து வைக்கப்பட்டு இருந்தன. இதுதவிர மாவட்டத்தில் உள்ள தியேட்டர்கள், டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் வ.உ.சி. பூங்கா உட்பட பல்வேறு பூங்காக்கள் மூடப்பட்டு இருந்தன.
ஏமாற்றத்துடன் திரும்பினர்
இதனால் பூங்காக்களுக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் உழவர் சந்தைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் வழக்கம் போல் செயல்பட்டது. அதுபோன்று பெரும்பாலான இறைச்சி கடைகளும் திறக்கவில்லை. உக்கடம் மீன் மார்க்கெட்டும் மூடப்பட்டு இருந்தன.
ஆனால் பொது போக்குவரத்தான அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. அதில் குறைந்த அளவிலேயே பொது மக்கள் பயணம் செய்தனர். பெரும்பாலான பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. இதன் காரணமாக கோவையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.