தூங்கி கொண்டு இருந்த சிறுமிகளின் போர்வையை இழுத்த காட்டுயானை

வால்பாறையில் வீட்டுக்குள் துதிக்கையை நுழைத்து தூங்கி கொண்டு இருந்த சிறுமிகளின் போர்வையை இழுத்த காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-19 17:06 GMT
வால்பாறை,

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பன்னிமேடு, சங்கிலிரோடு, முத்துமுடி, நல்லமுடி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாட்களாக 2 குட்டிகளுடன் தாய் யானை உலா வந்தது. அவை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வீடுகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. தொடர்ந்து சோலையார் எஸ்டேட் சிலுவை மேடு சிறுவனச்சோலை பகுதியில் நின்றிருந்த அந்த காட்டுயானைகளை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஈட்டியார் எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன. அப்போது உபாசி மற்றும் கல்லார் எஸ்டேட் பகுதியில் புகுந்த வேறொரு காட்டுயானை கூட்டத்தை விரட்ட வனத்துறையினர் சென்றிருந்தனர். 

இதனால் ஈட்டியார் பகுதியில் புகுந்த அந்த 3 காட்டுயானைகளும், அங்கிருந்த ரேஷன் கடையை உடைத்தன. மேலும் அரிசியை தின்றன. தொடர்ந்து மணியம்மா என்பவரது வீட்டின் கதவை உடைத்தன. மேலும் அதில் ஒரு காட்டுயானை, துதிக்கையை வீட்டுக்குள் நுழைத்து கட்டிலில் தூங்கி கொண்டு இருந்த 2 சிறுமிகள் போர்த்தியிருந்த போர்வையை பிடித்து இழுத்தது. 

உடனே பயந்துபோன சிறுமிகள் கட்டிலுக்கு அடியில் பதுங்கி கொண்டு கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கூச்சலிட்டும், தீப்பந்தம் காட்டியும் காட்டுயானைகளை விரட்டினர். அப்போது சுகந்தி என்பவரது வீட்டு கதவை சேதப்படுத்திவிட்டு, காட்டுயானைகள் சென்றன. இந்த தொடர் சம்பவம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்