மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி
மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி
வேலூர்
சத்துவாச்சாரியில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் தங்கசங்கிலி பறிக்க முயன்ற வாலிபரை தீவிரமாக போலீசார் தேடி வருகிறார்கள்.
தங்க சங்கிலி பறிக்க முயற்சி
வேலூர் சத்துவாச்சாரி 2&ம் பகுதி 8&வது தெருவை சேர்ந்தவர் திலகவதி (வயது 63). இவருடைய கணவர் நாகலிங்கம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்போது திலவகதி மகன் கோவிந்தசாமி வீட்டில் வசித்து வருகிறார். சத்துவாச்சாரி கானார் தெருவில் உள்ள பூர்வீக வீட்டில் திலகவதி மற்றும் கோவிந்தசாமி சேலை நெய்து வருகிறார்கள்.
நேற்று காலை 11 மணி அளவில் வழக்கம்போல் திலகவதி சேலை நெய்யும் பணியில் ஈடுபடுவதற்காக அந்த வீட்டிற்கு நடந்து சென்றார்.
கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்தொடர்ந்து வந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென திலகவதி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். அதனால் திடுக்கிட்ட அவர் தங்க சங்கிலியை கெட்டியாக பிடித்து கொண்டார். அதனால் வாலிபரால் சங்கிலியை பறிக்க முடியவில்லை. திலகவதி திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
வாலிபருக்கு வலைவீச்சு
இதுகுறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் தங்க சங்கிலி பறிக்க முயன்ற வாலிபரின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய வாலிபரை தேடி வருகிறார்கள்.