வக்கீல் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மூதாட்டி கைது

உத்தமபாளையம் வக்கீல் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மூதாட்டி கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-09-19 16:25 GMT
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றியவர் ரஞ்சித்குமார் (வயது 43). இவரை கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தமபாளையம்&அனுமந்தன்பட்டி சாலையில் காரில் வந்த மர்மகும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கில் 12 பேர் மீது உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த மயிலம்மாள் (65) என்பவர் மட்டும் தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் தேடி வந்தனர். எனினும் அவர் போலீசார் பிடியில் சிக்காமல் இருந்தார். 
இதையடுத்து தேனி போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தனிப்படை அமைத்து மயிலம்மாளை கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் உத்தமபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திவான்மைதீன், சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் மயிலம்மாளை தேடி வந்தனர். இதில் சென்னையில் உறவினர் ஒருவர் வீட்டில் மயிலம்மாள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று மயிலம்மாளை கைது செய்தனர். பின்னர் அவர் அங்கிருந்து உத்தமபாளையம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்