கொரோனா தடுப்பூசியை சரியாக கையாண்டு கூடுதல் டோஸ்களை செலுத்திய முதல் மாவட்டம் திருப்பூர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டினார்.

கொரோனா தடுப்பூசியை சரியாக கையாண்டு கூடுதல் டோஸ்களை செலுத்திய முதல் மாவட்டம் திருப்பூர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டினார்.

Update: 2021-09-19 15:44 GMT
கொரோனா தடுப்பூசியை சரியாக கையாண்டு கூடுதல் டோஸ்களை செலுத்திய முதல் மாவட்டம் திருப்பூர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டினார். 
மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் நேற்று 672 மையங்களில் நடைபெற்றது. 76 ஆயிரத்து 821 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 7 மணி முதல் முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த பணியில் 2 ஆயிரத்து 688 பல்துறையை சேர்ந்த பணியாளர்கள் பங்கேற்று தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டனர்.
பல்லடம் அருகே அருள்புரம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உடன் இருந்தார். முகாமிற்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். 
56 சதவீதம் பேருக்கு தடுப்பூசி
ஆய்வு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
 முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. 20 ஆயிரம் முகாம்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 20 லட்சத்து 77 ஆயிரத்து 95 பேர் உள்ளனர். இவர்களில் 13 லட்சத்து 86 ஆயிரத்து 891 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 67 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 2&வது தவணை தடுப்பூசி 2 லட்சத்து 72 ஆயிரத்து 982 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணியில் திருப்பூர் மாவட்டம் சிறந்த இலக்கை எட்டியுள்ளது. 
2&வது தவணை தடுப்பூசியை 13 சதவீதம் பேர் போட்டுள்ளனர். கடந்த வாரம் 12&ந் தேதி தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டு 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 11&ந் தேதி தமிழக அளவில் தடுப்பூசி போட்டவர்களின் சதவீதம் 45. 12&ந் தேதி மெகா தடுப்பூசி முகாமுக்கு பிறகு 52 சதவீதமாக உயர்ந்தது. தற்போது 56 சதவீதத்தை கடந்துள்ளது. 
முதல் மாவட்டம் திருப்பூர்
கடந்த மெகா தடுப்பூசி முகாமில் திருப்பூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 150 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 1 லட்சத்து 21 ஆயிரத்து 630 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 ஆயிரம் பேர் கூடுதலாக போடப்பட்டுள்ளனர். 38 மாவட்டங்களில் நடந்த முகாம்களில் தடுப்பூசியை சாதுரியமாக, சரியாக கையாண்டு கூடுதல் டோஸ்களை செலுத்திய முதல் மாவட்டம் திருப்பூர் ஆகும். 
தடுப்பூசி மருந்தின் அளவை குறைவாக எடுத்துள்ளதாக சந்தேகம் எழக்கூடும். அப்படியில்லை. ஒவ்வொரு குப்பியிலும் 10 பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும். 0.5 மில்லி லிட்டர் மருந்து எடுத்து தடுப்பூசி போட வேண்டும். மிகச்சரியாக கையாண்டால் ஒரு குப்பியில் கூடுதலாக இருக்கும் மருந்தை 1 அல்லது 2 பேருக்கு கூடுதலாக செலுத்த முடியும். உலக சுகாதார நிறுவனமும் அதை அங்கீகாரம் செய்துள்ளது. திருப்பூர் மாவட்டம் சிறப்பாக இந்த பணியை செய்து 15 ஆயிரம் பேருக்கு கூடுதலாக தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்கள். இன்றைய(நேற்று) முகாமில் 78 ஆயிரத்து 500 டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 90 ஆயிரம் பேருக்கு செலுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார். 
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி, மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், துணை இயக்குனர்(சுகாதாரப்பணிகள்) டாக்டர் ஜெகதீஷ்குமார், மாநகர் நல அதிகாரி பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார், பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுடர்விழி, தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஈஸ்வரமூர்த்தி, ராமசாமி, செந்தூர் முத்து, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் தங்கராஜ், துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், மாநகர அமைப்பாளர் செந்தில்குமார், நிர்வாகி திலகராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 


(பாக்ஸ்)
மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்
மேலும் அமைச்சர்  கூறியதாவது: 
கொரோனாவுக்கு பிறகு பள்ளிகள் திறந்து செயல்படுகிறது. இதுவரை ஒட்டுமொத்தமாக பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் எண்ணிக்கை 100&க்கும் குறைவாகவே இருக்கிறது. இதற்கு அச்சபட வேண்டிய அவசியம் இல்லை. பள்ளி மாணவர்களுக்கான தொற்று என்பது ஏ சிம்ஸ்டஸ் தான். எந்த பாதிப்பும் இல்லாத தொற்றாக அமைந்துள்ளது. அவர்களுடன் தொடர்புடையவர்களை பரிசோதனை செய்து பார்த்ததிலும் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. பள்ளி மாணவர்களுக்கு தொற்று ஏற்படுகிறது என்ற தேவையற்ற பீதியை ஏற்படுத்திவிடக்கூடாது. கடந்த 1Ñ ஆண்டுகளாக மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளார்கள். இப்போது தான் அவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருவதை பெருமையாக நினைக்கிறார்கள். தேவையற்ற அச்சத்தை மாணவ சமுதாயத்திடம் உருவாக்கக்கூடாது. 
கோவேக்சின் முதல் தவணை செலுத்தியவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது.  கோவேச்சின் முதல் தவணை தடுப்பூசி தற்போது செலுத்துவது இல்லை. கோவிஷீல்டு தடுப்பூசியை விட கோவேக்சின் செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறைவு. 18 லட்சம் பேருக்கு கோவேக்சின் 2&வது தவணை செலுத்த வேண்டியுள்ளது. மத்திய அரசிடம் இருந்து ஒதுக்கீடு பெற்று மருந்து கிடைத்ததும், அவர்களுக்கு 2&வது தவணை தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்படும். தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்களிடம் விழிப்புணர்வு உள்ளது. தடுப்பூசி தான் பற்றாக்குறையாக உள்ளது. மத்திய அரசு வழங்கினால் தடுப்பூசி செலுத்தப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.  



மேலும் செய்திகள்