கூடலூர்
கூடலூர் பகுதியில் தொடர்மழை, நோய் தாக்குதலால் பச்சை தேயிலை விளைச்சல் குறைந்து வருகிறது. போதிய விலை கிடைக்காததால் சிறு விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மழையால் விளைச்சல் பாதிப்பு
கூடலூர் பகுதியில் தேயிலை, காபி, குறுமிளகு, இஞ்சி மற்றும் மரவள்ளிக் கிழங்கு உள்பட காய்கறிகள் விளைகிறது. ஜூன் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை கனமழையும், மீதமுள்ள காலங்களில் நவம்பர் வரை மிதமான மழையும் பெய்வது வழக்கம்.
இந்த காலங்களில் பச்சை தேயிலை விளைச்சல் குறைவாக இருக்கும். ஆனால் அதன் பின்னர் மழையின் தாக்கம் குறைந்து இதமான வெயிலும் காணப்படும் சமயத்தில் விளைச்சல் மீண்டும் அதிகரிக்கும். இதற்கேற்ப கடந்த ஆண்டு பச்சை தேயிலை கிலோ ரூ.24 வரை விலை கிடைத்தது.
ஆனால் நடப்பாண்டில் காலம் தவறி தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மாறுபட்ட சீதோஷ்ண நிலை காரணமாக தேயிலை செடிகளில் நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பச்சை தேயிலை விளைச்சல் பாதிக்கப்பட்டு, மகசூல் குறைந்துள்ளது.
விவசாயிகள் பாதிப்பு
இந்த நிலையில் தற்போது தேயிலை விளைச்சலும் குறைந்து, கொள்முதல் விலையும் குறைந்து வருவதால் தேயிலை விவசாயிகள் பொருளாதார ரீதியாக வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர். இதனால் சிறு தேயிலை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
5 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்கள் சிறு விவசாயிகளாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர். தேயிலை தோட்டங்களில் பராமரிப்பு மற்றும் பச்சை தேயிலை அறுவடை செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஆனால் நடப்பாண்டில் பருவம் தவறி தொடர் மழை பெய்ததால் பச்சை தேயிலை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் விலையும் கிலோவுக்கு ரூ.14 மட்டுமே வழங்கப்படுகிறது.
இதனால் தொழிலாளர்கள் சம்பளம் உள்ளிட்ட இதர செலவினங்களை கணக்கிட்டால் விவசாயிக்கு எந்த வருவாயும் கிடைப்பதில்லை. எனவே விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.