பழவேற்காட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்க நடவடிக்கை; மத்திய மந்திரி எல்.முருகன் தகவல்

பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் மீனவர்களுடன் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.

Update: 2021-09-19 14:20 GMT
கலந்தாய்வு கூட்டம்

பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் உள்ள மீன்வளத்துறை அலுவலக வளாகத்தில் மீனவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். மீன்வளத்துறை ஆணையர் பழனிசாமி, கூடுதல் இயக்குனர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீன்வளத் துறை அதிகாரிகள் ஆம்ஸ்டிராங், பொன்னேரி வேலன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். இந்த கூட்டத்தில் பழவேற்காடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் பங்கேற்ற நிலையில் பழவேற்காடு ஏரியில் கடலும் ஏரியும் கலக்கும் இடமான முகத்துவாரத்தை தூர்வாரி நிரந்தரமாக அமைக்க வேண்டும். மீன்பிடி துறைமுகம் ஏற்படுத்தி தர வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் பேசினர்.

மீன்பிடி துறைமுகம்

இந்த கூட்டத்தில் மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.

அப்போது பழவேற்காடு பகுதியில் வசிக்கும் மீனவர்கள் வீடு கட்டி கொள்வதற்கு வீட்டுமனை பட்டா, மீன்பிடி துறைமுகம் அமைக்கவும் விரைவில் முடிவு எடுக்கப்படும் விவசாயிகளுக்கு இதுநாள் வரை வழங்கப்பட்டு வரும் கிசான் கிரெடிட் கார்டு திட்டம் மீனவர்களுக்கும் வழங்கப்படும். மீனவர்கள் நலன் கருதி கடற்பாசி வளர்ப்பு திட்டத்தை கொண்டு வந்து மீனவர்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர், மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, மீனவ கூட்டுறவு சங்க நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் பழவேற்காடு தோணிரவு பகுதியில் வளர்க்கப்படும் நண்டுகள் நல்ல முதிர்ச்சி அடைந்து விற்பனைக்கு தயாராக உள்ளதை பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்