போக்குவரத்து வார்டன் சேவையை மீண்டும் தொடங்க உத்தரவு; கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவிப்பு

போக்குவரத்து சிக்னல்கள், நெரிசல் மிகுந்த இடங்களில் போலீசாருடன் இணைந்து பணியாற்றுவதற்காக போக்குவரத்து வார்டன் அமைப்பு, கடந்த 1972-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

Update: 2021-09-19 09:17 GMT
இந்த அமைப்பில் என்ஜினீயர்கள், டாக்டர்கள், கல்வி வல்லுனர்கள், வணிகர்கள் போன்றவர்கள், கமிஷனர், கூடுதல் கமிஷனர் போன்ற அதிகாரத்தில் உள்ள அதிகாரிகள் மூலம்  நியமிக்கப்படுவார்கள். சென்னையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக போக்குவரத்து வார்டன்கள் சேவை மற்றும் ஆர்.எஸ்.பி. மாணவர்கள் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்த சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.

சென்னை சென்டிரல், மெரினா தொழிலாளர் சிலை, காந்தி சிலை, ஸ்பென்சர் சந்திப்பு, கோயம்பேடு சந்திப்பு, மேட்லி சந்திப்பு, அண்ணாநகர் ரவுண்டானா மற்றும் கடற்கரை பகுதிகளில் வார்டன் பணி மீண்டும் தொடங்கப்பட உள்ளது. பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்ட உடன் மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகளில் ஆர்.எஸ்.பி. மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அப்போது அவர்களுக்கு சாலை விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட உள்ளன.

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவைத்தொடர்ந்து, போக்குவரத்து வார்டன் சேவை நேற்றே தொடங்கியது. போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த அவர்களை சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் பிரதீப் குமார் சந்தித்து ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.

மேற்கண்ட தகவல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்