காதல் விவகாரத்தில் வாலிபர் தற்கொலை
காதல் விவகாரத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர், கள்ளக்காதலனுக்காக குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் கைதான அபிராமியின் தம்பி ஆவார்.
வாலிபர் தற்கொலை
சென்னையை அடுத்த மாங்காடு அருகே உள்ள பெரியபணிச்சேரி பகுதியை சேர்ந்தவர் சவுந்தர். இவருடைய மகன் பிரசன்னா மணிகண்டன் (வயது 27). இவர், அண்ணா நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிரசன்னா மணிகண்டன், இரவில் சாப்பிட்டு விட்டு தனது அறைக்குள் சென்றவர், திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.நேற்று காலையில் நீண்டநேரம் கதவை தட்டியும் அவர் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், ஜன்னல் வழியாக பார்த்தபோது பிரசன்னா மணிகண்டன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாங்காடு போலீசார், பிரசன்னா மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
அபிராமியின் தம்பி
தற்கொலை செய்து கொண்ட பிரசன்னா மணிகண்டன், 2018-ம் ஆண்டு பிரியாணி கடைக்காரருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ எண்ணி தனது 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் கைதான அபிராமியின் தம்பி ஆவார். பிரசன்னா மணிகண்டன், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்றுமுன்தினம் இரவு அந்த பெண்ணுடன் அவர் நீண்டநேரம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது அவரது காதலி, தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டு வருவதாக கூறியதாகவும், இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
செல்போன் ஆய்வு
பிரசன்னா மணிகண்டனின் காதலி, அவரது அக்கா அபிராமி குறித்து ஏதாவது பேசியதால் இருவருக்கும் செல்போனில் தகராறு ஏற்பட்டதா? அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசார் பிரசன்னா மணிகண்டனின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, அந்த செல்போனில் இருந்த அனைத்து எண்கள், அவர் கடைசியாக பேசிய அழைப்புகள் என அனைத்தையும் அழித்து இருப்பது தெரியவந்தது.