ஓடும் பஸ்சில் டிரைவர் மீது தாக்குதல்
கருங்கல் அருகே ஓடும் பஸ்சில் டிரைவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார்.
கருங்கல்:
கருங்கல் அருகே ஓடும் பஸ்சில் டிரைவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
டிரைவர் தாக்கப்பட்டார்
புதுக்கடை அருகே பரக்குடிவிளை தோட்டவாரம் பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 51). தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மார்த்தாண்டம் பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மார்த்தாண்டத்தில் இருந்து மேல்மிடாலம் செல்லும் ஒரு பஸ்சை ஓட்டினார். இந்த பஸ்சில் பைங்குளம் செல்வதற்காக ஒரு பெண் ஏறினார். பஸ் கிளம்பிய சிறிது நேரத்துக்கு பிறகு தான் அவருக்கு இந்த பஸ், பைங்குளத்துக்கு செல்லாது, வேறு வழியில் செல்லும் என்பது தெரியவந்தது. உடனே அவர் பஸ்சை நிறுத்தி இறக்கி விடும்படி கண்டக்டர், டிரைவரிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது.
ஆனால் டிரைவர் பரமேஸ்வரன் பஸ்சை நிறுத்தாமல், சானல்முக்கு பகுதி வந்ததும் அந்த பெண்ணை இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனை அந்த பஸ்சில் இருந்த கிள்ளியூர் பறையன் விளை பகுதியைச் சேர்ந்த ராஜையன் மகன் பால்ராஜ், பைங்குளம் வெட்டை பகுதியை சேர்ந்த குமரேசன் மகன் காளிதாஸ் ஆகியோர் கண்டித்ததோடு டிரைவர் பரமேஸ்வரனை தாக்கியதாக தெரிகிறது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
ஒருவர் கைது
இந்த தாக்குதலை நடத்தியதும் 2 பேரும் தப்பி ஓடினர். இதில் பால்ராஜை பொதுமக்கள் மடக்கினர். காளிதாஸ் தப்பி ஓடிவிட்டார். மேலும் இதுதொடர்பாக கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்ராஜை கைது செய்தனர். காளிதாஸை தேடிவருகின்றனர்.