போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் வெளியேற்றினர்

பூதலூர் அருகே மாரநேரி ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் வெளியேற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-18 21:35 GMT

திருக்காட்டுப்பள்ளி;
பூதலூர் அருகே மாரநேரி ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் வெளியேற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
அய்யனார் ஏரி
தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் மாரனேரியில் அய்யனார் ஏரி உள்ளது. சுமார் 225 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த ஏரி மூலம் மாரநேரி பகுதியை சேர்ந்த 1000 ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெறுகிறது. அய்யனார் ஏரிக்கு கல்லணைக்கால்வாயில் இருந்து தண்ணீர் வருகிறது. 
 இந்த ஏரியில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்றுமுன்தினம் தொடங்கியது. ஆக்கிரமிப்பை அகற்ற ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று 2&வது நாளாக மாரநேரி ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்குவதற்குள் ஏரிக்குள் செல்லும் பாதையில் குவிந்தனர். பின்னர் அவர்கள் வாகனங்கள் உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்களை ஏரிக்குள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மாரநேரியில் தஞ்சை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு  கென்னடி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜமோகன், ராஜ்குமார், பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, மற்றும் 100க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். 
பேச்சுவார்த்தை
மேலும் பூதலூர் தாசில்தார் ராமச்சந்திரன், துணை தாசில்தார் செந்தில்குமார், பூதலூர் வருவாய் ஆய்வாளர் சாந்தி, பொதுப்பணித்துறை கல்லணைக் கால்வாய் உதவி செயற்பொறியாளர் சண்முகவேல், மற்றும் அதிகாரிகளும் மாரநேரி கிராமத்தில் முகாமிட்டு இருந்தனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பூதலூர் தாசில்தார் ராமச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுடைய வாழ்வாதாரமே இந்த பகுதியில் விவசாய நிலம் தான். எனவே தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என ஆவேசமாக கூறினர். 
 ஒரு கட்டத்தில் தங்களுடைய ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டைகளை ஒப்படைப்பதாக கூறினார். 
அப்போது போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த பெண் ஒருவர் தன் கையில் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை  பெண் போலீஸ் ஒருவர் வலுக்கட்டாயமாக பிடுங்கினார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் போராட்டக்களத்தின் வழியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு நாற்காலிகள் சுமந்து சென்ற பணியாளர் ஒருவரை நாற்காலிகளை  கொண்டுசெல்ல விடாமல் போராட்டக்குழுவினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்களுக்கிடைய தள்ளு முள்ளு ஏற்பட்டது. மேலும் அதிகாரிகளுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 
போலீஸ் வேனில் ஏற்றினர்
இதைத்தொடர்ந்து மாலை 3.30 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாலசுந்தர் (வயது40), தேவா (42), மகேந்திரன் (32) அருண் (27) ஆகிய 4 பேரையும் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் மற்றும் பெண்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதன்பின் 4 பொக்லின் எந்திரங்களையும் ஏரிக்குள் கொண்டு சென்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை மாலை 4 மணி அளவில் தொடங்கினர்.  தற்போது ஏரியின் எல்லைகளை மட்டும் அடையாளம் காட்டி கரை அமைப்பது, அதன் பின்னர் மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மாரனேரி கிராமத்தில் நேற்று காலை முதல் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவியது. மேலும் கலவர தடுப்பு வாகனமான வஜ்ரா வாகனத்துடன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்றும் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்