தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓடுபாதையில் 3 மணி நேரம் பயணிகளுடன் நின்ற விமானம்
பெங்களூரு விமான நிலையத்தில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓடுபாதையில் விமானம் 3 மணி நேரம் பயணிகளுடன் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூரு:
ஓடுபாதையில் நின்ற விமானம்
பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து டெல்லி, சென்னை, தூத்துக்குடி, ஐதராபாத், உப்பள்ளி, பெலகாவி உள்ளிட்ட பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு ஒரு விமானம் புறப்பட்டது. அந்த விமானம் ஓடுபாதையில் சென்ற போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானிகள் கண்டுபிடித்தனர். இதனால் அந்த விமானத்தை ஓடுபாதையிலேயே விமானிகள் நிறுத்தினர். மேலும் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு, விமானிகள் தகவல் கொடுத்தனர்.
பயணிகள் குற்றச்சாட்டு
ஆனாலும் அந்த விமானத்திற்குள் இருந்த பயணிகளை கீழே இறக்க விமான நிலைய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தொ¤கிறது. இதனால் சுமார் 3 மணி நேரம் அதாவது மதியம் 1.30 மணி வரை பயணிகள் விமானத்திற்குள் சிக்கி தவித்தனர். ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டதாக நினைத்த பயணிகள், விமானிகள் மற்றும் பணிப்பெண்களிடம் தகராறு செய்தனர். மேலும் தங்களை விமானத்தில் இருந்து இறக்கிவிடும்படி கேட்டு கொண்டனர்.
இதையடுத்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரின் அனுமதி பெற்று பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர். பின்னர் ஓடுபாதைக்கு வந்த பஸ்சில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து பயணிகளை மாற்று விமானத்தில் டெல்லிக்கு விமான நிலைய அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே 3 மணி நேரம் விமானத்தில் சிக்கி கொண்ட தங்களுக்கு குடிக்க தண்ணீர் கூட கிடைக்கவில்லை என்று பயணிகள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.