ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.15 லட்சம் கொள்ளை
சிக்பள்ளாப்பூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.15 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அவர்கள் ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தி இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.
சிக்பள்ளாப்பூர்:
ஏ.டி.எம். எந்திரம்
சிக்பள்ளாப்பூர் பேரேசந்திரா பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் காவலாளிகள் கிடையாது என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, மர்மநபர்கள் சிலர் ஏ.டி.எம். மையத்துக்கு வந்துள்ளனர்.
ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த அவர்கள், எந்திரத்தை உடைத்து உள்ளே இருந்த பணத்தை கொள்ளையடித்தனர். பின்னர் அவர்கள், ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை அடித்து உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
ரூ.15 லட்சம் கொள்ளை
இந்த நிலையில் நேற்று காலை ஒருவர் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது, ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சம்மந்தப்பட்ட வங்கிக்கும், பேரேசந்திரா போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வங்கி மேலாளர் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். எந்திரத்தை ஆய்வு செய்தனர். அப்போது எந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் கண்காணிப்பு கேமராவை மர்மநபர்கள் சேதப்படுத்தியது தெரியவந்தது.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்மநபர்களின் ரேகைகளை பதிவு செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள், போலீசில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக, கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்பாக கண்காணிப்பு கேமராவை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து வங்கி மேலாளர் கொடுத்த புகாரின்பேரில் பேரேசந்திரா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.