பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.;
பொள்ளாச்சி,
புரட்டாசி மாதம் இந்துக்களின் புனித மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த மாதம் இறைச்சி வகைகளை சாப்பிடுவதை தவிர்த்து பக்தர்கள் விரதம் இருப்பார்கள். மேலும் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி பொள்ளாச்சி கடை வீதி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து பெருமாளுக்கு பால், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதற்கிடையில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் நேரடி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
சோமந்துறைசித்தூரில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதற்கிடையில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், கோட்டூர் போலீசார் சோதனை சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொள்ளாச்சி&பாலக்காடு சாலையில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையொட்டி காலை 6 மணிக்கு மகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் பக்தர்களுக்கு பிரசாரம் வழங்கப்பட்டது. கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர். ஆனைமலையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பால், தயிர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.