மண் குவியலை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
சாலை விரிவாக்கப் பணிக்காக கொட்டப்பட்ட மண் குவியலை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூரில் தஞ்சையில் இருந்து மானாமதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கக்பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி சாலையின் ஓரங்களில் மண் நிறுவுவதற்காக ஆங்காங்கே மண் குவியல், குவியலாக குவிக்கப்பட்டிருந்தன. தற்போது சாலை ஓரங்களில் மண் நிறுவப்பட்ட பின்பும் மீதமுள்ள மண் குவியல் அகற்றப்படாமல், குவிக்கப்பட்டபடியே இருந்து வருகிறது.
இதனால் நேற்று இரவு அவ்வழியே எதிர் எதிரே வந்த இரண்டு இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த 2 பேர், ஒதுங்க வழியில்லாமல் அந்த மண் குவியலில் சறுக்கி கீழே விழுந்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக இருவரும் லேசான காயங்களுடன் தப்பினர்.
இதனையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், மண் குவியலால்தான் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகிறது. எனவே மண் குவியலை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த திருமானூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மண் குவியலை அகற்ற ஏற்பாடு செய்வதாக போலீசார் தெரிவித்ததை அடுத்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.