அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்
பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடத்தில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
கிணத்துக்கடவு
பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடத்தில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
அகல ரெயில்பாதை
போத்தனூர்-பொள்ளாச்சி இடையே 40 கிலோ மீட்டர் தூரம் ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் கோவை-பொள்ளாச்சி இடையே காலை, மதியம், மாலை என 3 வேளைகளில் கோவை, பொள்ளாச்சி, மதுரை ஆகிய இடங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அதன்பின்னர் கொரோனா பரவல் ஏற்ப்பட்டதால் ரெயில்கள் இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டது. முன்னதாக ரெயில்வே துறை சார்பில் போத்தனூர்-பொள்ளாச்சி ரெயில்பாதையை மின்மயமாக்க ரூ.37 கோடியே 36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து போத்தனூர் செல்லும் அகல ரெயில் பாதையில் மின் கம்பங்கள் அமைக்கும் பணி நடந்தது. பின்னர் மின் கம்பத்தில் மின் கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணிகள் முடிவடைந்து, மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து போத்தனூர்-பொள்ளாச்சி இடையே மின்சார ரெயில் எந்திரமும் இயக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது.
சோதனை ஓட்டம்
இந்த நிலையில் நேற்று பொள்ளாச்சியில் இருந்து போத்தனூர் இடையே டீசல் என்ஜின் ரெயில் கிளம்பியது. பொள்ளாச்சியில் காலை 8.12 மணிக்கு கிளம்பிய ரெயிலில் மூன்று பெட்டிகள் பொருத்தப்பட்டு இருந்தது. கிணத்துக்கடவு ரெயில் நிலையத்திற்கு காலை 8.34 மணிக்கு ரெயில் வந்தது. அங்கு நிற்காமல் சென்ற ரெயில் காலை 8.50 மணிக்கு போத்தனூர் சென்றடைந்தது. ஏற்கனவே போத்தனூர்-பொள்ளாச்சி இடையே ரெயில் 80 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல ரெயில்வே துறை அனுமதி வழங்கி உள்ளது.
தற்போது போத்தனூர்-பொள்ளாச்சி இடையே மின்மயமாக்கல் பணி முடிந்துவிட்டதால் தற்போது தண்டவாளங்களின் உறுதித்தன்மையை சோதனை ஓட்டம் மூலம் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
100 கிலோ மீட்டர் வேகம்
அதன்பிறகு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:- போத்தனூர்-பொள்ளாச்சி வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்து ரெயில்கள் இயக்க தயார் நிலையில் உள்ளது. ஏற்கனவே இந்த வழித்தடத்தில் மின்சார ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு முடிவு பெற்றுள்ளது.
தற்போது போத்தனூர்-பொள்ளாச்சி வழித்தடத்தில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் சென்ற பகுதிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், 60 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் சென்ற பகுதிகளில் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இயக்க விரைவில் அறிவிப்பு வர உள்ளது. இதனால் நேற்று(நேற்று முன்தினம்) டீசல் என்ஜின் ரெயில் மூலம் போத்தனூர்-பொள்ளாச்சி இடையே உள்ள வழித்தடத்தில் தண்டவாளங்களின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.
நாளை காலை போத்தனூரில் இருந்து பொள்ளாச்சி வரை மின்சார ரெயிலை இயக்கி ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் இந்த வழித்தடத்தை ஆய்வு செய்வார். அதன் பின்னர் அவரது அனுமதி கிடைத்ததும் போத்தனூர்&பொள்ளாச்சி வழித்தடத்தில் ரெயில்கள் இயங்க தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.