புதுக்கோட்டை போஸ்நகரில் குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

புதுக்கோட்டை போஸ் நகரில் குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்படைந்தது.;

Update: 2021-09-18 18:15 GMT
புதுக்கோட்டை:
சாலை மறியல்
புதுக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. இதில் குடிநீர் வினியோகத்தில் அவ்வப்போது தட்டுப்பாடு, சீராக வினியோகிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபடுவது உண்டு. அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பார்கள். இந்த நிலையில் போஸ்நகர் பகுதியில் குடிநீர் சரியாக வினியோகிக்கப்படாததை கண்டித்தும், குடிநீர் வசதி கோரியும் நேற்று காலை பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காலிகுடங்களுடன் பெண்கள் தரையில் அமர்ந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் கணேஷ்நகர் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். மேலும் குடிநீர் வினியோகித்திற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதன்பின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

மேலும் செய்திகள்