மகன் இறந்த துக்கத்தில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை

திமிரி அருகே திருட்டு வழக்கில் தந்தையை போலீசார் அழைத்துச்சென்றதால் மனம் உடைந்த மகன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் மகன் இறந்த துக்கத்தால் கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-18 17:44 GMT
ஆற்காடு

திமிரி அருகே திருட்டு வழக்கில் தந்தையை போலீசார் அழைத்துச்சென்றதால் மனம் உடைந்த மகன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் மகன் இறந்த துக்கத்தால் கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

கட்டிட மேஸ்திரி

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த வளையாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 47), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி விசாலாட்சி (40). 

இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் சந்தோஷ் (21) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். மற்றொரு மகன் கோகுல் (18) பிளஸ்&2 படித்துள்ளார்.

விஜயகுமார் குடும்பத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் செய்யாறு அருகே உள்ள செய்யாற்றுவென்றான் கிராமத்தில் ஒரு வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகை திருட்டு போனது. 

இது சம்பந்தமாக செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக விஜயகுமாரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர். 

மேலும் இதுசம்பந்தமாக விஜயகுமாரின் மனைவி விசாலாட்சி, மகன் கோகுல் ஆகிய இருவரையும் ஆரணி போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். 

மனைவி& மகன் குட்டையில் குதித்து தற்கொலை முயற்சி
இதனால் மனமுடைந்த விசாலாட்சி, கோகுல் ஆகிய இருவரும் கடந்த 15-ந் தேதி ஆரணி அருகே உள்ள பையூர் கல்குவாரியில் உள்ள தண்ணீர் குட்டையில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். அப்போது விசாலாட்சியை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி விட்டனர். கோகுல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் மகன் கோகுல் இறுதிச்சடங்கை முடித்த விஜயகுமார் மன உளைச்சலில் இருந்துள்ளார். 

தூக்குப்போட்டு தற்கொலை

இதனைத் தொடர்ந்து நேற்று  தனது சொந்த ஊரான வளையாத்தூர் கிராமத்தில் உள்ள வீட்டில் விஜயகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த திமிரி போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 தற்கொலை செய்து கொண்ட விஜயகுமார் இறப்பதற்கு முன் கடிதம் எழுதி வைத்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்