ரெயிலில் கடத்தி வந்த 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருப்பூரில் ரெயிலில் கடத்தி வந்த 14 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வடமாநில வாலிபர்கள் 3 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்
திருப்பூரில் ரெயிலில் கடத்தி வந்த 14 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வடமாநில வாலிபர்கள் 3 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரெயிலில் கடத்தல்
வடமாநிலங்களில் இருந்து வரும் ரெயில்களில் புகையிலை பொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் கடத்துவதை தடுக்கும் வகையில் சென்னை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ உத்தரவின் பேரில் கோவை துணை போலீஸ் சூப்பிரண்டு யாசின் மேற்பார்வையில் சப்&இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இத்தனிப்படையினர் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று காலை திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது தன்பாத்தில் இருந்து திருப்பூருக்கு வந்த ரெயிலில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் இறங்கினார்கள். அவர்களின் உடைமைகளை போலீசார் சோதனை செய்தபோது, 3 பேர் கொண்டு வந்த பையில் குட்கா, புகையிலை பாக்கெட்டுகள் அதிகம் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
3 பேர் கைது
விசாரணையில் அவர்கள் ஒடிசாவை சேர்ந்த கிஷோர்பாய் (வயது 23), பலராம் ஷாகு(23), உத்தரபிரதேசத்தை சேர்ந்த அஜய்குமார்(22) என்பது தெரியவந்தது. பனியன் நிறுவனங்களில் வேலை செய்ய வருவது போல் இவர்கள் 3 பேரும் சொந்த ஊரில் இருந்து குட்கா, புகையிலை பொருட்களை கொண்டு வந்து பதுக்கி இங்குள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளனர்.
புகையிலை பொருட்களுக்கு திருப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் கள்ளத்தனமாக வெளிமாநிலங்களில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 14 கிலோ 600 கிராம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 ஆயிரம் ஆகும். பின்னர் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சோதனை தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.