திண்டுக்கல் அருகே விவசாயியை கொலை செய்து தண்டவாளத்தில் உடல் வீச்சு?

திண்டுக்கல் அருகே, விவசாயியை கொலை செய்து தண்டவாளத்தில் உடல் வீசப்பட்டதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-09-18 16:49 GMT
சின்னாளபட்டி:
திண்டுக்கல் அருகே, விவசாயியை கொலை செய்து தண்டவாளத்தில் உடல் வீசப்பட்டதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 சிதைந்த நிலையில் உடல்
திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் ரெயில்வே மார்க்கத்தில், காந்திகிராமம் அருகே செட்டியப்பட்டி ரெயில்வே கேட் உள்ளது. அதில் இருந்து 200 அடி தூரத்தில், பாலத்தின் மேல் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பாலத்தின் அருகே மொபட் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் கைப்பிடி உடைந்திருந்தது. மேலும் ஆங்காங்கே ரத்தம் சிதறி கிடந்தது. 
இதைத்தவிர அருகே கிடந்த 2 சவுக்கு மரக்கட்டைகளில் ரத்தக்கறை படிந்திருந்தது. உடைந்த நிலையில் பீர்பாட்டில்களும் சிதறி கிடந்தன. இதுமட்டுமின்றி பாலத்தின் அடிப்பகுதியில் இருந்து, 20 அடி உயரத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளத்துக்கு உடலை இழுத்து சென்றதற்கான தடயம் இருந்தது. 
அடித்து கொலை?
சம்பவ இடத்தை ஆய்வு செய்ததில், அந்த நபரை உருட்டுக்கட்டைகள் மற்றும் பீர் பாட்டில்களால் அடித்து கொலை செய்து விட்டு உடலை ரெயில்வே தண்டவாளத்தில் வீசி சென்றிருப்பது ரெயில்வே போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து ரெயில்வே போலீசார், அம்பாத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 
அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த அம்பாத்துறை போலீசார், தண்டவாளத்தில் சிதைந்த நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அம்பாத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று முதலில் தெரியவில்லை. அவர் அணிந்திருந்த சட்டை, வேட்டி மற்றும் அங்கு நின்று கொண்டிருந்த மொபட் ஆகியவற்றை துருப்புச்சீட்டுகளாக வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். 
 விவசாயி
போலீசார் நடத்திய விசாரணையில் அவர், ஏ.வெள்ளோடு சிறுமலை அடிவார பகுதியில் தோட்டத்தில் தங்கியிருந்து விவசாயம் செய்து வரும் ஜெரால்டு தங்கராஜ் என்ற மண்டையன் (வயது 47) என்பது தெரியவந்தது. ஜெரால்டு தங்கராஜீக்கு திருமணமாகி விட்டது. இவருக்கு கிஷோர் (18) என்ற மகனும், விரோனிக்கா (15) என்ற மகளும் உள்ளனர். 
ஜெரால்டு தங்கராஜின் மனைவி ரீத்தா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிணற்றில் தவறி விழுந்து இறந்து விட்டார். அதன்பிறகு தனது மகன், மகளுடன் சிறுமலை அடிவாரத்தில் உள்ள தனது தாய் சம்பூரணம் வீட்டில் தங்கியிருந்து அவர் விவசாயம் செய்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை தோறும் இறைச்சி கடைகளில் கூலிக்கு ஆடு அறுக்கும் வேலையையும் ஜெரால்டு தங்கராஜ் செய்தார்.
கொலையை மறைப்பதற்காக...
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு செட்டியப்பட்டி காட்டுப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் குடிப்பதற்காக தனது மொபட்டில் ஜெரால்டு தங்கராஜ் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் மதுபானம் குடித்து விட்டு தோட்டத்துக்கு திரும்பி செல்லும் வழியில் தான், அவரை அடித்து கொலை செய்து மர்ம நபர்கள் ரெயில்வே தண்டவாளத்தில் வீசி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். 
கொலையை மறைப்பதற்காக, ரெயில்வே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் அவரது உடலை இழுத்து போட்டுள்ளனர். ரெயில் முன் பாய்ந்து ஜெரால்டு தங்கராஜ் தற்கொலை செய்து கொண்டார் என்று கருதவே, தண்டவாளத்தில் மர்ம நபர்கள் உடலை போட்டு சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோப்பநாய் சோதனை
இதற்கிடையே சம்பவ இடத்துக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் திண்டுக்கல்லில் இருந்து மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது, சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு ரெயில்வே தண்டவாளத்தில் இருந்து 20 அடி உயரத்தில் உள்ள ரெயில்வே பாலத்தின் அடிப்பகுதி வரை ஓடிச்சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
திண்டுக்கல் அருகே விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்டு, ரெயில்வே தண்டவாளத்தில் உடல் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்